

தஞ்சாவூர்: கும்பகோணம் அருகே அதிமுக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அதிமுகவில் நிகழும் குளறுபடிகளால் மனவேதனையடைந்த அவர் இந்த முடிவை எடுத்த நிலையில், அவரது உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து பேசிய அவர், “மகேந்திரனின் பெண் குழந்தை, வளர்ந்து, பள்ளிபடிப்பை தொடங்கி, கல்வி கற்று முடிக்கும் வரை ஆகும் அனைத்து கல்விக் கட்டணத்தையும் அதிமுக ஏற்றுக் கொள்ளும். அதே போல் கட்சி சார்பில் ரூ.30 லட்சமும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சமும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும்.” என்று தெரிவித்தார்.
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் வளையல்காரத் தெருவைச் சேர்ந்த கலியமூர்த்தி மகன் மகேந்திரன் (37). இவர் திருப்பனந்தாளில் பூக்கடை நடத்தி வந்தார். அதிமுகவில் கிழக்கு மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளராக பொறுப்பு வகித்தார். இவருக்கு முனீஸ்வரி (32) என்ற மனைவியும், நித்ஸ்ரீ(2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு மகேந்திரன் பேஸ்புக்கில் ஒரு வீடியோவை பதிவு செய்தார். அதில், "அதிமுக இரண்டாக பிரிந்து இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை, அதிமுக ஒன்றிணைய வேண்டும், மீண்டும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக வேண்டும், அடுத்த பிறவியிலும் அதிமுகவின் எளிய தொண்டனாக நான் பிறக்க வேண்டும்.
மகேந்திரன்
நான் மனவேதனையில் இருப்பதால், தற்கொலை செய்து கொள்கிறேன், எனது உடலுக்கு பொதுச்செயலாளர் அஞ்சலி செலுத்தினால், எனது ஆன்மா சாந்தி அடையும்" என வீடியோ வெளியிட்டு, உடலில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த அதிமுக பொதுச் செயலாளர் கே.பழனிசாமி இன்று (ஜூன் 1) மதியம் திருப்பனந்தாளில் உள்ள அவரது வீட்டுக்கு வந்து மகேந்திரனின் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
அப்போது செய்தியாளர்களிடம் கே.பழனிசாமி கூறுகையில், “மகேந்திரன் தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட செய்தி மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அளிக்கிறது. பல ஆண்டுகளாக இந்தப் பகுதியிலே சிறப்பான முறையிலே கட்சிப் பணியாற்றி, கழக நிர்வாகிகளிடத்திலும், தொண்டர்களிடத்திலும், தலைமைக்கும் மிகுந்த விசுவாசமாக செயல்பட்டவர். அவருடைய மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், அதிமுகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கின்றேன். மகேந்திரனின் பெண் குழந்தை, வளர்ந்து, பள்ளிபடிப்பை தொடங்கி, கல்வி கற்று முடிக்கும் வரை ஆகும் அனைத்து கல்விக் கட்டணத்தையும் அதிமுக ஏற்றுக் கொள்ளும்.
அதே போல் கட்சி சார்பில் ரூ.30 லட்சமும், தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் ரூ.25 லட்சமும் குடும்பத்தினருக்கு வழங்கப்படும். அதிமுகவின் தொண்டர்கள் விலைமதிக்க முடியாத உயிர், இனி இப்படிப்பட்ட நிகழ்வில் யாரும் ஈடுபட வேண்டாம் என தாழ்மையுடன் தொண்டர்களுடைய பாதம் பணிந்து, வணங்கி கேட்டுக்கொள்கிறேன்.
இந்த சம்பவத்தால் நாங்கள் அனைவரும் மிகுந்த மன வேதனையில் இருக்கிறோம். மிகுந்த அதிர்ச்சியில் இருக்கிறோம். இன்றைக்கு அந்த குடும்பம் எப்படி கதறி அழுகின்றது என்பதை ஒவ்வொரு தொண்டனும் உணர்கின்றான், ஒவ்வொரு நிர்வாகியும் உணர்கின்றான்.
இந்த சூழ்நிலையில் வேறு கருத்தை என்னால் தற்போது சொல்ல இயலாது என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, மன வேதனையோடு, கடுமையான காயத்தோடுதான் உள்ளேன்” என கண்ணீர் மல்க தெரிவித்தார்.