

முதல்வர் ஸ்டாலின்
நாகர்கோவில்: “பாஜக எனும் டப்பா எஞ்சினை நம்பி, அதிமுக இருக்கிறது. அதிமுக என்ற மூழ்கும் கப்பலை நம்பி, பாஜக இருக்கிறது. பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான். ராஜ்ஜியம் கிடைக்காது.” என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.1,785.37 கோடி செலவிலான 1,217 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 1,237 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 3,12,082 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.
முதல்வர் ஸ்டாலின் இன்று நாகர்கோவிலில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை: உங்களுக்கெல்லாம் நினைவிருக்கும் என்று நான் கருதுகிறேன். 2025 புத்தாண்டு பிறப்பதற்கு முன்பு நான் குமரிக்கு வந்தேன். முக்கடல் சூழக்கூடிய குமரி முனையில், முப்பால் புலவன் வள்ளுவனுக்கு, முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய பேரறிவுச் சிலையின் வெள்ளிவிழாவை நாம் கொண்டாடினோம். திருவள்ளுவர் சிலையையும், விவேகானந்தர் பாறையையும் இணைக்கும் கண்ணாடி இழைப் பாலத்தை திறந்து வைத்தேன். இப்போது, 2026-ல் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைவதற்கு முன்னால், அரசு விழாவில் உங்களை எல்லாம் சந்திக்க வந்திருக்கிறேன்.
2004-ல் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு, நிலம் கையகம் செய்யப்பட்டு வீடுகள் கட்டி கொடுத்தாலும், அரசு நிலம் என்ற வகைப்பாட்டில் இருந்தது. சொந்த வீடுகளில் குடியிருக்கும் பயனாளிகளுக்கு வரன்முறைப்படுத்தப்பட்டு இன்று பட்டா வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, இன்று கன்னியாகுமரி வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, 40 ஆயிரத்து 86 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இவ்வளவு இருந்தாலும் உங்கள் மாவட்டத்திற்கு என்று வந்துவிட்டு, உங்களுக்கு புது அறிவிப்புகளை வெளியிடாமல் சென்றால் நன்றாக இருக்குமா? மேடையில் இருப்பவர்கள் சும்மா இருப்பார்களா! அதுவும் காங்கிரஸ் கட்சியை கேட்கவே வேண்டாம் – என்னை உரிமையோடு துளைத்து எடுத்துவிடுவார்கள். அதனால், குமரி மாவட்டத்திற்கான ஆறு புதிய அறிவிப்புகளை இப்போது நான் உங்களிடத்தில் வெளியிட இருக்கிறேன்.
முதல் அறிவிப்பு - சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தரக்கூடிய கன்னியாகுமரி நகராட்சியின் குடிநீர்த் தேவைகளை நிறைவு செய்ய, பழையாற்றிலிருந்து கூடுதல் குடிநீர் வழங்க 28 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும். மேலும், முக்கடலும் சங்கமிக்கும் இந்த பகுதியில் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்படும்.
இரண்டாவது அறிவிப்பு - குளச்சல் நகராட்சி மற்றும் மண்டைக்காடு பேரூராட்சி பொதுமக்களின் நீண்டகாலக் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், AVM கால்வாய் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புனரமைக்கப்படும்.
மூன்றாவது அறிவிப்பு - களியக்காவிளை – கன்னியாகுமரி சாலையில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் உள்ள பகுதிகளில், 9 கோடி ரூபாய் செலவில் சாலைகள் அகலப்படுத்தி மேம்படுத்தப்படும்.
நான்காவது அறிவிப்பு - கல்குளம் வட்டம் - முளகுமூட்டில் உள்ள பழம்பெரும் தூய மரியன்னை பசிலிக்கா தேவாலயம், 2 கோடி ரூபாய் செலவில், அதன் பழமை மாறாமல் புனரமைக்கப்படும்.
ஐந்தாவது அறிவிப்பு - தமிழ்நாடு மீனவர் நலவாரியம் மூலமாக தற்போது மீனவர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்க்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை, திருமண உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் போன்ற பல்வேறு நிதி உதவிகள் அனைத்தும் உயர்த்தி வழங்கப்படும். இதற்கான விரிவான அரசாணைகளையும் விரைவில் வெளியிடுவோம்.
ஆறாவது அறிவிப்பு - கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது, காணாமல் போகும் நேர்வில், காப்பீடு உள்ளிட்ட நிவாரணங்கள் கிடைக்கும் நாள் வரை அந்த மீனவர்களின் குடும்ப வாரிசுதாரருக்கு மாதம் இரண்டாயிரம் ரூபாய் உதவித்தொகையாக மீனவர் நல வாரியம் மூலம் வழங்கப்படும்.
14 வயதிலிருந்து நான் அரசியலில் இருக்கிறேன். 50 ஆண்டு தொடர் உழைப்பால் ஒரு பேரியக்கத்தின் தலைவர் என்ற பொறுப்பை அடைந்திருக்கிறேன். சட்டமன்ற உறுப்பினராக - மேயராக - அமைச்சராக - துணை முதல்வராக - எதிர்க்கட்சித் தலைவராக, இன்று, முதல்வராக இருக்கிறேன்.
பெருமையோடு சொல்கிறேன். நான் செல்லாத ஊரே தமிழ்நாட்டில் இல்லை என்று சொல்கின்ற அளவிற்கு, பயணித்து, மக்களை நான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன். அதனால்தான், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து, புரிந்து ஒவ்வொரு திட்டத்தையும் தீட்டுகிறேன்.
உங்கள் எதிர்காலத்தை என்னை நம்பி தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் ஒப்படைத்திருக்கிறீர்கள். அதற்கு நான் நிச்சயமாக, உண்மையாக இருப்பேன்! உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவது மாதிரி தான் நான் உழைத்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் சொல்லவேண்டுமா! என் சக்திக்கு மீறி உழைத்துக் கொண்டிருக்கிறேன். வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்காத மக்களுக்கும் சேர்த்துதான் உழைக்கிறேன்.
ஆனால் சிலர், தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களை வட்டமடிப்பார்கள். தேர்தல் சீசன் என்கின்ற காரணத்தால், பிரதமர் மோடி, இனி அடிக்கடி தமிழ்நாட்டு பக்கம் வரப் போகிறார். ஏற்கெனவே வர ஆரம்பித்துவிட்டார். அதை நினைத்து, அவருடைய கூட்டணியினரே பயப்படுகிறார்கள். ஏன் தெரியுமா? எவ்வளவு அதிகமாக பிரதமர் அவர்கள் இங்கு வருகிறாரோ, அந்தளவுக்கு, பெரிய வித்தியாசத்தில், என்டிஏ கூட்டணி தோல்வி அடையும். ஏனென்றால், தமிழ்நாட்டிற்கு அவர் ஒன்றுமே செய்யவில்லை என்பது மக்களுக்கு ஞாபகம் வரும்.
நேற்றுகூட, அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத் மாநில மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிற்கு எதுவும் இல்லை. தேர்தல் வருகிறதே என்று பட்ஜெட்டிலும் ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டிற்குச் செல்ல இருக்கிறோமே என்று அமைச்சரவைக் கூட்டத்திலும் நம்முடைய கோரிக்கைகளுக்கு ஒன்றிற்கும் கூட ஒப்புதல் தரவில்லை. அதனால் தான் நான் அடிக்கடி சொல்வேன். இந்த தேர்தல் என்பது, தமிழ்நாடு Vs NDA! தமிழ்நாடு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்து ஆளப்படவேண்டும். டெல்லியில் இருந்து ஆளப்படக்கூடிய நிலை வரக்கூடாது. இதை தீர்மானிப்பதற்கான தேர்தல் தான் வரப்போகிற தேர்தல்.
தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் தாழ்த்தி, வீழ்த்தவேண்டும் என்று பா.ஜ.க. நினைக்கின்றது. ஏனென்றால், வளர்ச்சி இருக்கக்கூடிய மாநிலத்தில் பா.ஜ.க. இருக்காது! பா.ஜ.க. இருந்தால் அங்கே வளர்ச்சி இருக்காது. குமரி மாவட்டம் என்பது அனைத்து மதங்களையும் சேர்ந்த மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வரக்கூடிய மாவட்டம்! ஆனால், நாடு முழுவதும் என்ன நடந்து கொண்டிருக்கிறது? அண்மையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது, இந்தியா முழுவதும் கிறிஸ்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மகாராஷ்டிராவில், பிற்படுத்தப்பட்ட முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு ரத்து. மணிப்பூர் இன்னும் பற்றி எரிகிறது.
அசாமில் இன்னும் மோசம். அந்த மாநிலத்தின் பா.ஜ.க. முதல்வர், தான் வகிக்கும் பொறுப்பின் மாண்பையே மறந்து, முஸ்லீம்கள் மீது வெளிப்படையாக வெறுப்பைக் கக்குகிறார். பிஹாரில், துணை முதல்வர் என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா? பள்ளிக்கூடங்களுக்கு அருகில் இறைச்சி கடைகள் இருந்தால் அகற்றுவோம் என்று பேசியிருக்கிறார். நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று முடிவு செய்வதற்கு இவர்கள் யார்? இப்படி ஒரு நிலையை தமிழ்நாட்டிலும் கட்டவிழ்த்துவிடத்தான் அவர்கள் தவியாக தவிக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய திராவிட மாடல் அரசில், மதநல்லிணக்கமும், ஒற்றுமையும் பேணப்படுகிறது. வக்பு திருத்த சட்டம், சிஏஏ ஆகியவற்றை எதிர்த்து, சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறோம். சிறுபான்மையினர் பாதுகாப்பாக இங்கு இருக்கிறார்கள். பெரும்பான்மையினர் சகோதர உணர்வோடு இருக்கிறார்கள். அனைவரும் சமமாக நடத்தப்படுகிறார்கள்.
வரலாற்றிலேயே இல்லாத எண்ணிக்கையாக 4 ஆயிரம் திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு செய்திருக்கிறோம். இந்தப் பகுதியை சேர்ந்த நம்முடைய பாலபிரஜாபதி அடிகளார் என்ன பேசியிருக்கிறார் என்றால், “நம்முடைய முதல்வருக்கு சாதியும் இல்லை, மதமும் இல்லை! மொழி இருக்கிறது, இனமான உணர்வு இருக்கிறது! இது ஒரு பொற்காலம்!” என்று பேசியிருக்கிறார். வள்ளலார் அன்பர்கள் பாராட்டுகிறார்கள். உண்மையான ஆன்மீக பெரியோர்கள் பாராட்டுகிறார்கள். இதுதான் பா.ஜ.க.வின் கண்களை உறுத்திக் கொண்டே இருக்கிறது! நான் வெளிப்படையாகவே பா.ஜ.க.வினரை கேட்கிறேன்.
எப்போதுதான் நீங்கள் வன்முறையை விட்டு, வளர்ச்சியைப் பற்றி பேசுவீர்கள்? எப்போதுதான் வெறுப்பையும், பிரிவினையையும் விதைக்கின்ற முயற்சிகளை நிறுத்திவிட்டு, தமிழ்நாட்டிற்கு நல்ல விஷயம் பற்றிப் பேசப்போகிறீர்கள்? யோசிப்பீர்கள்? தொடர்ந்து தமிழ்நாட்டை குறைசொல்லி பேசுகிறீர்களே. அதற்கு முதலில், உங்களுக்கு தகுதி இருக்கிறதா? நீங்கள் ஆளுகின்ற எந்த மாநிலம் தமிழ்நாட்டை விட சிறப்பாக ஆளப்படுகிறது? தமிழ்நாட்டிற்கு வர இருக்கின்ற பிரதமர் நம்முடைய கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்வாரா?.
தமிழ்நாட்டு மீனவர்களைக் காக்க எடுத்த நடவடிக்கை என்ன? இலங்கை கடற்படையால், நம்முடைய மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும் எப்போது முடிவுக்கு வரும்? இதை தீர்த்து வைப்போம் என்று சொல்லித்தானே 12 ஆண்டுகளுக்கு முன்னால், உறுதிமொழி வழங்கிவிட்டு, வாக்குறுதி வழங்கிவிட்டு ஆட்சிக்கு வந்தீர்கள்? வெளியுறவுத் துறையும், கடற்படையும் யார் கண்ட்ரோலில் இருக்கிறது? இவர்களுக்கு கிடைத்திருக்கக்கூடிய சரியான ஆள்தான் இப்போது எதிர்க்கட்சி தலைவராக இருக்கக்கூடிய பழனிசாமி!
ஒருவர் நாட்டு மக்கள் எல்லோருக்கும் 15 இலட்சம் ரூபாய் தருவேன் என்று வடை சுட்ட மாதிரியே, பழனிசாமி அவர்களும் வாய்க்கு வந்தபடி வெரைட்டி வெரைட்டியாக இப்போது வடை சுட்டுக் கொண்டிருக்கிறார். இந்த வடைகளை எல்லாம் மக்கள் நம்ப தயாராக இல்லை.
இது ஒருபக்கம் என்றால், இன்னொரு பக்கம் – தேர்தலை காரணமாக காட்டி, மகளிர் உரிமைத்தொகையை மூன்று மாதத்திற்கு நிறுத்தி வைத்துவிடலாம், மக்களுக்கு தி.மு.க. அரசு மீது அதிருப்தியை கொண்டு வந்து, கெட்டப் பெயரை ஏற்படுத்தலாம் என்று சூழ்ச்சி செய்தார்கள்.
இதை அட்வான்சாக நாங்கள் தெரிந்து கொண்டு, என்னுடைய சகோதரிகளுக்கும், தாய்மார்களுக்கும் 5 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் பணமாக வழங்கினேன். நாம் செய்த இந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக்கில், மக்கள் மகிழ்ச்சி. பாவம் எதிர்க்கட்சிகள்தான் நிலைகுலைந்து போயிருக்கிறார்கள். முதலில், இதை கிண்டலடித்தார்கள், கொச்சைபடுத்தினார்கள். ஆனால், ஒரு கட்டத்திற்கு மேல் அவர்களாலேயே நம்முடைய அதிரடி முடிவுக்கு மக்களிடம் கிடைத்த வரவேற்பை மறைக்க முடியவில்லை. அதனால், இப்போது அதற்கு நாங்கள்தான் காரணம் என்று சொல்கிறார்கள். எங்களால்தான் நடந்தது என்று உரிமை கொண்டாட வந்திருக்கிறார்கள்.
நீங்கள் என்ன வேண்டுமானாலும் சொல்லி புலம்புங்கள். எங்கள் திட்டங்கள் இப்போது ஹிட்டாகிவிட்டது!. 5 ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமைத்தொகை சிறப்பு தொகுப்பு மக்களிடம் சூப்பர் ஹிட். ஹிட்டோ ஹிட்.
பா.ஜ.க. டப்பா எஞ்சினை நம்பி, அ.தி.மு.க. இருக்கிறது. அ.தி.மு.க. என்ற மூழ்கும் கப்பலை நம்பி, பா.ஜ.க. இருக்கிறது! பூஜ்ஜியமும், பூஜ்ஜியமும் சேர்ந்தால், பூஜ்ஜியம்தான்! ராஜ்ஜியம் கிடைக்காது! நம்முடைய திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் எஞ்சின். 11.19 சதவிகிதம் இரட்டை இலக்கு வளர்ச்சியோடு யாரும் எட்டிப் பிடிக்க முடியாத அளவிற்கு அதிவேகமாக முன்னால் சென்று கொண்டிருக்கிறது. திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் மீண்டும் அமையும். இப்போது நாங்கள் செய்திருக்கக்கூடிய சாதனைகளை எங்களுடைய செகண்ட் இன்னிங்ஸில் நாங்களே மிஞ்சுவோம். தமிழ்நாட்டின் இந்த வளர்ச்சிப் பயணத்தில், ஒருவரையும் பின்தங்க விடமாட்டோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.