கிடா விருந்து... கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர்! - நாமக்கல் சீட்டுக்கு முட்டி மோதும் அதிமுக தலைகள்

கிடா விருந்து... கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர்! - நாமக்கல் சீட்டுக்கு முட்டி மோதும் அதிமுக தலைகள்

Published on

தேர்தலில் சீட் பிடிக்க பலரும் பலவிதமான உத்திகளை கையில் எடுப்பார்கள். நாமக்கல் அதிமுக-வில், சீட் பிடிப்பதற்காக வாரம் தோறும் கட்சியினருக்கு கறி விருந்து ‘கவனிப்பு’களை நடத்தியும் யார் கேட்டாலும் கோயிலுக்கு நன்கொடைகளை வாரி வழங்கியும் இரண்டு பேர் பணத்தை இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளுக்கும் சேர்த்து அதிமுக-வில் விருப்ப மனு அளித்த 151 பேர் நேர்காணலில் பங்கேற்றார்கள். இதில், நாமக்கல் தொகுதிக்கு மட்டும் 27 பேர் நேர்காணலுக்கு வந்திருந்தாலும் முன்னாள் எம்எல்ஏ-வும் நாமக்கல் மாநகரச் செயலாளருமான பாஸ்கருக்கும் வர்த்தக அணி மாநில இணைச்செயலாளர் பி.எஸ்.மோகனுக்கும் தான் இப்போது இடத்தைப் பிடிப்பதில் கடும்போட்டி.

இவர்களில் பாஸ்கர் பழனிசாமிக்கு வேண்டப்பட்டவர். அதனால் அவரது ஆதரவில் எப்படியும் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் ஞாயிறு தோறும் ஒன்றியம் வாரியாக கிடா வெட்டி கட்சியின ருக்கும் வாக்காளப் பெருமக்களுக்கும் கறி விருந்து படைத்து வருகிறார். புத்தாண்டை முன்னிட்டு மாநகர் முழுவதும் ‘நம்ம நாமக்கல் நம்ம பாஸ்கர்’ என போஸ்டர் ஒட்டியும் புரட்சி செய்தார்.

இவர் இப்படிச் செய்தாலும் மாவட்டச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான தங்கமணிக்கு இவரை அறவே பிடிக்கவில்லை. அதனால் இவர் மோகனை தட்டிக் கொடுத்து வருகிறார். மோகனும் தங்கமணி எப்படியும் தன்னை கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிடுவார் என்ற நம்பிக்கையில் கோயில் விழாக்களுக்கு நன்கொடை வழங்குவது, கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளுக்கு ஸ்பான்சர் அளிப்பது என அவர் ஒரு ரூட்டில் போய்க்கொண்டிருக்கிறார்.

யாருக்கு சீட் என உறுதியாகும் முன்பே இவர்கள் இருவரும் இப்படி பணத்தை வாரி இறைப்பதைக் கண்டு அதிமுக-வினரே கொஞ்சம் திக்குமுக்காடிப் போய்த்தான் உள்ளனர். அதேசமயம், இந்த இருவரில் யாருக்கு சீட் கொடுத்தாலும் மற்றவரை காலை வாராமல் இருக்க மாட்டார்கள் என்பதால், இம்முறையாவது நாமக்கல்லில் அதிமுக ஜெயிக்க வேண்டுமே என நினைக்கும் கழகத்தினர் கலக்கத்தில் இருக்கிறார்கள்.

கிடா விருந்து... கிரிக்கெட்டுக்கு ஸ்பான்சர்! - நாமக்கல் சீட்டுக்கு முட்டி மோதும் அதிமுக தலைகள்
முதியவர்களின் முகாம் ஆகிறதா தவெக? - சர்ச்சைகளும்... சங்கடங்களும்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in