

திருநெல்வேலி: திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய தென் மாவட்டங்களில் மொத்தம் உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக 12 தொகுதிகளிலும், 7-ல் பாஜகவும் போட்டியிடுகின்றன.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்களை அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி நேற்று முன்தினம் வெளியிட்டிருந்தார்.
அதில் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 தென்மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் தொகுதிகள் வருமாறு: விளாத்திகுளம், தூத்துக்குடி, வைகுண்டம், கோவில்பட்டி, சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, கன்னியாகுமரி ஆகிய 12 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுகிறது.
தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் தலா 4 தொகுதிகளிலும், திருநெல்வேலி மாவட்டத்தில் 3 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1 தொகுதியிலும் அதிமுக களம் காண்கிறது.
பாஜக போட்டியிடும் தொகுதிகள் வருமாறு: ராதாபுரம், நாகர்கோவில், விளவங்கோடு, குளச்சல், பத்மநாபபுரம், திருச்செந்தூர், வாசுதேவநல்லூர். நாங்குநேரி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் அமமுக-வும், கிள்ளியூர் தொகுதியில் தமாகா-வும் போட்டியிடுகின்றன.
கடந்த 2021 சட்டப் பேரவை தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 4 தொகுதிகளிலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர், திருவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, விளாத்திகுளம் ஆகிய 6 தொகுதிகளிலும், தென்காசி மாவட்டத்தில் தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய 5 தொகுதிகளிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி, பத்மநாபபுரம் ஆகிய 2 தொகுதிகளிலுமாக மொத்தம் 17 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டிருந்தது.
இம்முறை இந்த எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது. இது இந்த 4 மாவட்டங்களில் உள்ள அதிமுகவினருக்கு உற்சாக குறைவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தொகுதியை தவிர்த்து மற்ற 5 தொகுதிகளிலும் பாஜகவும், தமாகாவும் தாமரை சின்னத்தில் களமிறங்குகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இம்மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு தொகுதிகளில் பாஜக போட்டியிட்டிருந்தது. அதில், நாகர்கோவில் தொகுதியில் மட்டும் எம்.ஆர். காந்தி வெற்றிபெற்றிருந்தார்.
கிள்ளியூர் தொகுதி தமாகாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் அதிமுகவுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், தொகுதிகள் குறைக்கப்பட்டதால் அதிமுகவினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுபோல், திருநெல்வேலி மாவட்டத்தில் நாங்குநேரி தொகுதியை கூட்டணி கட்சியான அமமுகவுக்கு ஒதுக்கியதால் அதிருப்தி அடைந்த இத்தொகுதி முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாராயணன், கட்சியிலிருந்து விலகவுள்ளதாக கட்சி வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதுபோல், ராதாபுரம் தொகுதியையும் பாஜகவுக்கு விட்டுக்கொடுத்துள்ளதால் இத்தொகுதியில் எம்எல்ஏ கனவுடன் வலம்வந்த அதிமுக பிரமுகர்கள் சோர்வடைந்துள்ளனர்.