

கடந்த 5 ஆண்டுகால திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் சராசரியாக ரூ.5.30 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இதுதொடர்பாக, அதிமுக தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: கடந்த 5 ஆண்டுகால ஆட்சியால் மக்கள் படும் இன்னல்களை வீடுதோறும் கொண்டு சேர்க்க,விடியா ஆட்சி - உங்கள் வீட்டு பில்லே சாட்சி என்ற பெயரில் மின் கட்டணம், சொத்து வரி, வீட்டு வரி ரசீதை வழங்கி மக்களுக்கு உண்மை நிலையை உணர்த்தும் பிரச்சாரம் கடந்த ஜன.28ம் தேதி முதல் நடந்து வருகிறது. இதுவரை 1.04 கோடி குடும்பங்களை நாம் சென்று சேர்ந்துள்ளோம்.
ரூ.11.66 லட்சம் கோடி இழப்பு: மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் உள்ள அனைத்து பூத்களிலும் இந்த பிரச்சாரத்தை மேற்கொள்ள ஏதுவாக, பிரின்டர் கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இந்த திமுக ஆட்சியால் சரா சரியாக ஒரு வீட்டுக்கு ரூ.5.30 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. அதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள 2.20 கோடி குடும்பங்களுக்கு கணக் கிட்டால், ஒட்டுமொத்தமாக ரூ.11.66 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
முகத்திரை கிழிக்கப்படும்: அமலாக்கத் துறை அனுப்பிய ஊழல் விவரங்களின் அடிப்படையில் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரி அதிமுக வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
நகராட்சி நிர்வாகம் எனும் ஒரு துறையிலேயே ரூ.1,020 கோடி ஊழல் என்றால், இன்னும் எத்தனை துறைகள், எத்தனை ஊழல்கள். இன்னும் இரண்டே மாதங்கள்தான். அதிமுக ஆட்சி அமைந்ததும் எல்லா ஃபைல்களும் திறக்கப்படும். முகத்திரைகள் கிழிக்கப்படும். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.