

அமைச்சர் கீர்த்தனா. | படம்: எஸ்.சத்தியசீலன் |
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்காட் தொழில்நுட்பப் பூங்காவில் இயங்கி வரும் ‘ஜி.டபிள்யூ.சி டேட்டா ஏ.ஐ நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் 1,000 புதிய செயற்கை நுண்ணறிவு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
ஓசூர் அருகே சென்னசந்திரம் ஊராட்சியில் உள்ள எல்காட் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்தில் ‘ஜி.டபிள்யூ.சி டேட்டா ஏ.ஐ’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா நேற்று பார்வையிட்டு பணியார்களுடன் கலந்துரையாடினார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கீர்த்தனா கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த தரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ‘ஜி.டபிள்யூ.சி டேட்டா.ஏ.ஐ’ மாநிலத்தில் 1,000 புதிய ‘ஏ.ஐ’ வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்காக முதல்வர் விஜய் தலைமையிலான அரசுடன் இந்த நிறுவனம் சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முன்னேற்றம் மற்றும் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நிறுவனத்தின் தலைமைக் குழுவினருடன் விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
பொதுமக்களுக்கான அரசு சேவைகளை விரைவாகவும், திறன்மிக்கதாகவும் மாற்றும் வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்த யோசனைகளை நிறுவனத்தினர் சமர்ப்பித்துள்ளனர். 11 தொழில்நுட்பத் துறைகளில் 250-க்கும் மேற்பட்ட நிபுணர்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், உற்பத்தி, சில்லறை வணிகம், நிதிச் சேவைகள், சுகாதாரம் மற்றும் பொதுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சேவை வழங்கி வருகிறது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.