

விஜயா, லட்சுமணன்
விழுப்புரம்: விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட கடும் போட்டி நிலவியது. வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பு, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளரும், கோலியனூர் ஒன்றிய செயலாளருமான சுரேஷ்பாபு தொகுதியில் முக்கியஸ்தர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆதரவு திரட்டினார்.
இதனால் வாய்ப்புக்கு காத்திருந்த விழுப்புரம் நகர செயலாளர் பசுபதி அதிருப்தி அடைந்தார். மேலும் வெற்றி வேட்பாளரை நியமிக்காமல் தோல்வியை சந்திக்கும் ஒருவருக்கு சி.வி.சண்முகம் வாய்ப்பு கொடுப்பதாக கூறி அவருக்கு எதிராக அடுக்கடுக் கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து அதிமுகவில் இருந்து வெளியேறினார்.
அதன்பிறகே பசுபதி நீக்கப்பட்டதாக பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார். சுரேஷ்பாபுதான் போட்டியிடப் போகிறார் என்ற பேச்சு இருந்த நிலையில், விழுப்புரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட அவரது மனைவி விஜயாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவர் கோலியனூர் ஒன்றிய குழுத் தலைவராக இருந்துள்ளார். தற்போது அடிப்படை உறுப்பினராக மட்டுமே உள்ளார். இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் கேட்டபோது, “விழுப்புரம் தொகுதியில் திமுக சார்பில் லட்சுமணன் எம்எல்ஏ மீண்டும் போட்டியிடுவது உறுதி என்கின்றனர்.
இவரை எதிர்த்து போட்டியிட அதிமுகவில் பலம் வாய்ந்த நபர்களை மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகத்தால் அடையாளம் காண முடியவில்லை. இதுநாள் வரை ஒன்றிய செயலாளர் சுரேஷ்பாபு போட்டியிடுகிறார் என கூறப்பட்டு வந்த நிலையில், பெண் சென்டிமென்ட் அடிப்ப டையில் அவரது மனைவி விஜயாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஒன்றிய செயலாளரின் மனைவி போட்டியிடுவது என்பது ரகசியம் காக்கப்பட்டிருக்கலாம். மேலும் ஜோதிடத்தின் மீதான அதீத நம்பிக்கையால் லட்சுமணனை வீழ்த்த பெண் வேட்பாளர் தேர்வுக்கு காரணமாக இருக்கலாம்” என்றனர்.
விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக சார்பில் இதுவரை பெண் வேட்பாளர்கள் போட்டியிடவில்லை. மேலும் கடந்த 16 தேர்தல்களாக வெற்றி பெற்ற அனைவரும் ஆண்கள் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.