

கோப்புப் படம்
சென்னை: பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர்கள் அளித்த பதிலுரையை அதிமுக, பாஜக, பாமக (அன்புமணி அணி) எம்எல்ஏ-க்கள் புறக்கணித்தனர்.
சட்டபேரவையில் நேற்று இடைக்கால பட்ஜெட் மீதான விவாதத்துக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்ஆர்கே பன்னீர்செல்வம் பதில் அளித்துப் பேசினர். ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களின் பதிலுரையைப் புறக்கணித்தனர். அவர்கள் சட்டபேரவைக்கு வரவில்லை.
பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் பாஜக எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்கு வந்து, வருகைப் பதிவேட்டில் கையெழுத்து போட்டுவிட்டு, பேரவை நிகழ்வுகளைப் புறக்கணித்தனர். அதேபோல, பாமக (அண்புமணி ஆதரவு) எம்எல்ஏக்களும் பதிலுரையை புறக்கணித்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பாமக எம்எல்ஏ வெங்கடேஷ் கூறும்போது, பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகளும் இல்லை. இன்றைய பதில் உரையிலும் எதுவும் இருக்காது என்ற காரணத்தால், பாமக புறக்கணித்துள்ளது. அரசு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், விவசாயிகள் உள்ளிட்டோர் போராடி வரும் சூழலில், அவர்களுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இல்லை என்ற காரணத்தால், பதில் உரையை புறக்கணித்தோம்” என்றார்.