

ஆதவ் அர்ஜுனா வேட்புமனு தாக்கல்
சென்னை: “வெளிப்படையான ஆட்சியை உருவாக்குவோம். தவெகவில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. அதன் பின்னணியில் பொருளாதார பின்புலமோ, சாதியோ கிடையாது” என தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்நிலையில், வில்லிவாக்கம் சட்டப்பேரவைத் தொகுதியில் தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுசெயலாளர் ஆதவ் அர்ஜுனா இன்று காலை மனுத்தாக்கல் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் வேட்புமனு தாக்கல் செய்வததற்கு தலைவர்கள் அனைவரும் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
வில்லிவாக்கம் தொகுதியில் ஒரு எம்எல்ஏ அலுவலகம் கூட கிடையாது. நான் கடந்த ஆறு மாத காலமாக இந்த தொகுதிக்கு வந்து பார்க்கிறேன்.பக்கத்தில் தான் கொளத்தூர் மற்றும் அமைச்சர்களின் தொகுதி இருக்கிறது. ஆனால், முதல்வர் ஸ்டாலின் இது குறித்துகேள்வி எழுப்பியதே கிடையாது. தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் என்ன மக்கள் பணி செய்தார்கள் என முதல்வர் ஏதும் அறிக்கை வாங்கி பார்த்தாரா என்ன தெரியவில்லை.
மூன்று மாதத்துக்கு ஒருமுறை எம்எல்ஏவின் ரிவ்யூ மீட்டிங் நடக்கும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். வெளிப்படையான ஆட்சியை உருவாக்குவோம். தவெகவில் இளைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைத்துள்ளது. ஆனால், அதில் பொருளாதார பின்புலமோ, சாதியோ கிடையாது. சட்டப்பேரவையில் ஒவ்வொரு எம்எல்ஏவும் சாதி, மதங்களைக் கடந்து நல்ல நிர்வாகியாகவும், காப்பாளராகவும் இருக்க வேண்டும் என தலைவர் வலியுறுத்தியிருக்கிறார்” இவ்வாறு அவர் பேசினார்.