நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவு: ஸ்டாலின் இரங்கல்

நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவு: ஸ்டாலின் இரங்கல்
Updated on
1 min read

சென்னை: நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி இன்று (செப்.20) காலமானார். அவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவெய்தியதையடுத்து, காவேரி மருத்துவமனையில் அவரது உடலுக்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் இறுதி மரியாதை செலுத்தினார்.

அப்போது அவரது மனைவி துர்கா ஸ்டாலின், திமுக தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில் கூறியதாவது: “முன்னாள் முதல்வர் கருணாநிதியும், நடிகர் சிவாஜி கணேசனும் நட்புக்கு இலக்கணமாய் வாழ்ந்தவர்கள். காலத்தால் கரையாத அவர்களது நட்பின் பாசம், இரு குடும்பங்களையும் தலைமுறைகள் கடந்த உறவாகப் பிணைத்திருக்கிறது.

அந்தப் பாசப் பிணைப்பில் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே அன்பு பாராட்டி வந்த சகோதரி சாந்தி மறைவு மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புச் சகோதரியை இழந்து ஆற்றொணாத் துயரில் வாடும் அவரது கணவர் நாராயணசாமி, மகள்கள் விஜி லட்சுமி, சத்யவதி, சகோதரர்கள் ராம்குமார், பிரபு உள்ளிட்ட குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவாஜி கணேசனின் மகள் சாந்தி மறைவு: ஸ்டாலின் இரங்கல்
ஆசிய விளையாட்டுப் போட்டி: மகளிர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்றார் இளவேனில்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in