

சென்னை: ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கில், சென்னை உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு திருவள்ளூர், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, கோவை உட்பட தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் ‘ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனம் செயல்பட்டு வந்தது. இதில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், மாதம் ரூ.36 ஆயிரம் வட்டி வழங்குவதாக இந்நிறுவனம் விளம்பரம் செய்தது.
இதை நம்பி பலர் முதலீடு செய்தனர். இதற்கிடையில், மக்களிடம் ஆசையை தூண்டி, பண மோசடியில் ஈடுபடுவதாக ஆருத்ரா நிறுவனத்தின் மீது புகார்கள் எழுந்தன. அதன் அடிப்படையில் 21 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் இந்நிறுவனம், சுமார் ஒரு லட்சத்து 9,255 பேரிடம் ரூ.2,438 கோடி மோசடி செய்தது தெரிந்தது. இதையடுத்து, ஆருத்ரா இயக்குநர்கள் மாலதி, ராஜசேகர், உஷா, தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, ரூபேஷ் குமார் மற்றும் ஏஜெண்டுகள் பலர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சினிமா நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வாக்குமூலம் பெற்றனர். மேலும், கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து தங்கம், சொகுசு கார்கள், அசையா சொத்துகள், முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
அமலாக்கத் துறை அதிகாரிகளும் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். விசாரணையின் தொடர்ச்சியாக, சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 15 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
குறிப்பாக, அமைந்தகரையில் உள்ள ஆருத்ரா கோல்டு டிரேடிங் நிறுவன தலைமை அலுவலகம், வில்லிவாக்கத்தில் உள்ள இயக்குநர் ராஜசேகர், சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் உஷா, காஞ்சிபுரத்தில் முன்னாள் பாஜக நிர்வாகி ஹரிஷ், பூந்தமல்லியில் தீபக் கோவிந்த் பிரசாத், நாராயணி, சிட்லபாக்கத்தில் ரூபேஷ் குமார் வீடு மற்றும் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 15 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
இந்த சோதனையில், பொதுமக்களின் பணத்தை சட்டவிரோதமாக பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்ததற்கான ஆவணங்கள், தமிழகம் முழுவதும் வாங்கி குவிக்கப்பட்ட சொத்துகள் தொடர்பான ஆவ ணங்கள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.