

ஆதவ் அர்ஜுனா
சென்னை: “விசிக குறித்த ஆ.ராசாவின் ட்வீட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் தமிழக மக்களிடமும், விசிக தலைவர் திருமாவளவனிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கனிமொழி இதற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும்” என பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, “இன்றைய தினத்தை தவெகவின் வெற்றி நாளாகக் கருதுகிறோம். பெரியார், அம்பேத்கர், அண்ணா கனவு கண்ட சமூகநீதி, மதசார்பற்ற அமைச்சரவையை முதல்வர் விஜய் உருவாக்கியுள்ளார். இந்த தேர்தலில் பண பலம் தூக்கி எறியப்பட்டுள்ளது, சாதியின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேர்தல் அரசியலை மக்கள் தூக்கியெறிந்துள்ளனர். சி.ஜோசப் விஜய் என சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்டு மத அரசியலை தூக்கியெறிந்துள்ளார் எங்கள் தலைவர். எல்லோருக்குமான ஒரு முதல்வராக விஜய் உள்ளார். எல்லா மதமும், எல்லா சாதிகளும், இளைஞர்களும், பெண்களும் இணைந்து இந்த வெற்றியை உருவாக்கினர்.
விஜய் தனது முதல் மாநில மாநாட்டில் சொன்னது போல, ஆட்சியில் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என எல்லா கட்சிகளுக்கும் பிரதிநிதித்துவம் கொடுத்துள்ளார். முதல்வர் விஜய் எந்தவிதமான சாதி, குடும்ப பின்புலத்தையும் பார்க்காமல் இளைஞர்களுக்கான ஒரு அமைச்சரவையை உருவாக்கியுள்ளார். இது இந்தியாவே பார்த்து வியக்கும் அமைச்சரவையாக உள்ளது. அமைச்சரவையில் 8 தலித் சகோதரர்கள் முக்கிய துறைகளுக்கு பொறுப்பேற்றுள்ளனர்.
108 தொகுதிகளில் வெற்றிபெற்று, பெரும்பான்மை இல்லாவிட்டால் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடும் எனச் சொன்னார்கள். அந்தச் சூழலில் முதலில் காங்கிரஸ் எங்களுக்கு ஆதரவளித்தது. இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகள் எங்களுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கினர். ஆனால், சொன்ன வாக்குறுதியின் படி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என முதல்வர் விஜய் அந்தக் கட்சிகள் அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுத்தார். நானும் என் பேட்டியில் பொதுவெளியில் அழைப்பு விடுத்தேன்.
இதன் பின்னர் 59 ஆண்டுகள் கழித்து காங்கிரஸ் மீண்டும் அமைச்சரவையில் இடம்பிடித்துள்ளது. அதேபோல ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ என 1999-ல் முதன்முதலாக மூப்பனாரின் கூட்டணியில் இருந்தபோதே திருமாவளவன் குரல் எழுப்பினார். 1948-ல் உருவாக்கப்பட்ட ஐயூஎம்எல் கட்சிக்கு இதுவரை எந்த அரசும் அதிகாரத்தை பகிர்ந்து கொடுத்தது கிடையாது. அவர்கள் இன்று அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். எனவே இன்றைய நாளை உண்மையான சமூகநீதி நாளாக நாங்கள் பார்க்கிறோம்.
முதல்வர் விஜய், அமைச்சர்கள் பதவியேற்புக்கு பின்னர் திருமாவளவன் மற்றும் காதர் மொகிதீனைப் பார்த்து ‘இன்று தான் நான் மனநிறைவோடு உள்ளேன். இன்றுதான் இந்த அமைச்சரவை நிறைவுபெற்றது’ என்று நெகிழ்ச்சியோடு சொன்னார். வேட்பாளர் பட்டியல் வெளியிட்டபோதே நாங்கள் சாதி பார்த்து வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. மக்களும் தவெகவுக்கு சாதி பார்த்து வாக்களிக்கவில்லை. இன்று ஊடகங்களில் இந்துசமய அறநிலையத் துறையை ஒரு குறிப்பிட்ட சாதிக்கு கொடுத்துள்ளதாக சொல்கிறார்கள். அமைச்சர் ரமேஷின் சாதி எதுவென்று கூட எங்களுக்கு தெரியாது.
தவெகவின் வெற்றிக்கு உழைத்தவர்களுக்கு முதல்வர் விஜய் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கியுள்ளார். சாதி, மதத்தை எல்லாம் மக்கள் தூக்கியெறிந்துவிட்டனர். இந்த அரசு பெரியார், அண்ணா, அம்பேத்கரின் கொள்கையின் படிதான் செயல்படும். அதனால்தான், எங்களுக்கு பெரும்பான்மை இல்லாதபோது, அதிமுகவிடம் ஆதரவு கேட்டிருந்தால், எளிதாக கிடைத்திருக்கும். ஆனால் இந்த அரசு மதசார்பற்றது என்ற நம்பிக்கையை காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளிடம் உருவாக்கி ஆட்சியமைத்தோம். 60 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் இருந்த ஐயூஎம்எல் கட்சியிடம் அமைச்சரவையில் இடம்பெறுவதன் அவசியத்தை எடுத்துரைத்தோம். அமைச்சரவையில் இடம்பெற்றதை இன்று காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல் தொண்டர்கள் தங்கள் வீடுகளில் கொண்டாடுகின்றனர்.
திமுக தலைமையில் சட்டப்பேரவைத் தேர்தலை இந்தக் கட்சிகள் எதிர்கொண்டன. கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே. தேர்தலுக்குப் பின் கூட்டணியை முடிவு செய்யும் உரிமை அந்தந்தக் கட்சிகளுக்கு உள்ளது. எந்தக் கட்சியும் திமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுக்கவில்லை. அப்படி இருக்கையில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.ராசா, விசிக மற்றும் விசிக தலைவர் திருமாவளவனை பார்த்து சொல்லக்கூடாத வார்த்தையை பதிவு செய்துள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்.
ஒரு கட்சியையோ, ஒரு தலைவரையோ பெண்ணின் உறவுடன் தொடர்பு படுத்திப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது. திமுகவிடம் இன்று கடமையும் இல்லை, கண்ணியமும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. இந்த 3 கோட்பாடையும் மறந்துவிட்டார். திமுகவின் துணைப்பொதுச் செயலாளர் இதுபோன்ற கருத்தை பதிவு செய்துள்ளார், இதற்கு திமுக தலைவரின் கருத்து என்ன?.
திமுக எதிர்க்கட்சியாக செயல்படுவதை நாங்கள் மதிக்கிறோம். அதன் அடிப்படையில் தான் முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். ஆனால், இந்த ஜனநாயக பண்பு 75 ஆண்டு கட்சியான திமுகவுக்கு இல்லை. எனவே ஆ.ராசாவின் அந்த ட்வீட்டை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அவர் தமிழக மக்களிடமும், விசிக தலைவர் திருமாவளவனிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். கனிமொழி எல்லாவற்றுக்கும் குரல் கொடுப்பார். ஆனால் பெண்ணின் உறவை மையமாக வைத்து பேசிய திமுகவின் ஆ.ராசாவின் கருத்தை அவர் கண்டிக்க வேண்டும்.
பெண்கள் குறித்த விமர்சனம் பற்றி காவல்துறையில் புகாரளிக்கப்பட்டால், அதன் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மு.க.ஸ்டாலின் முதல்வராக இருந்தபோதே, உள்துறை அனுப்பிய சுற்றறிக்கையில் முதலில் வந்தே மாதரம் பாடவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது. அதுபற்றி முதல்வர் விஜய், ஆளுநரிடம் பேசிய போது, உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தல் படி செயல்படுவதாக கூறியுள்ளார்.
ஏற்கெனவே முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பதவியேற்பின் போது இதே நடைமுறையின் படி வந்தே மாதரம் முதலில் பாடப்பட்டது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என ஸ்டாலின் ட்வீட் போட்டிருந்தார்.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடாமல் இருப்பது மாநில சுயாட்சிக்கு எதிரானது. இதுகுறித்து சட்ட ரீதியாக ஆலோசனை செய்து வருகிறோம். தமிழக அரசின் நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்துதான் முதலிடம் பெறும். அதேபோல இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி, மதசார்பற்ற கொள்கைகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எப்போதும் நாங்கள் தமிழையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். அது எங்கள் உயிர்நாடி. யாரையும் பழிவாங்கும் நோக்கம் இல்லை. ஆ.ராசா சொன்ன வார்த்தைகள் விசிகவினரையும், திருமாவளவனையும் காயப்படுத்தியுள்ளது. இன்று நினைத்திருந்தால் திருமாவளவன் அமைச்சராகி, இடைத்தேர்தலில் நின்றிருக்கலாம். ஆனால், அவர் வன்னி அரசுக்கு வாய்ப்பு வழங்கினார்.
முன்பு சிஎம்டிஏவில் வீடு கட்ட 40, 50 ஆயிரம் ரூபாய் கட்சி நிதி, எம்எல்ஏ நிதி என சொல்லி வாங்கினார்கள், அதனை ஒழித்துள்ளோம். டாஸ்மாக்கில் அமைச்சருக்கான பணம் ஒழிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை போன்ற முக்கியத் துறைகளில் நடந்த ஊழல் ஒழிக்கப்பட்டுள்ளது. ஆற்றுமணல், சட்டவிடோத கனிமவள சுரங்கங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போக்குவரத்துத் துறை உள்ளிட்ட12, 13 துறைகளில் ஊழல் கடுமையாக இருக்கும். இப்போது அங்கெல்லாம் பணம் வாங்குவதில்லை என சொல்கிறார்கள். முன்பு இருந்த 36 சதவீத கமிஷன் எனும் முறையை நாங்கள் தூக்கி எறிந்துள்ளோம். முன்பெல்லாம் முதல்வர் குடும்பம், அமைச்சர்கள், அதிகாரிகள் என பலருக்கும் கமிஷன் சென்றது. இப்போது ஜீரோ கமிஷன் என ஆகிவிட்டது. முதல்வர் விஜய் அவர் சொன்னது போலவே தூய்மையான ஆட்சியை உருவாக்கியுள்ளார். 50 ஆண்டுகளாக உருவாக்க முடியாததை, இப்போது முதல்வர் உருவாக்கியுள்ளார். முதல்வர் வழியில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சியினர் அனைவரும் நேர்மையாக இருப்போம். காவல்துறையில் நல்ல அதிகாரிகளை நியமித்து வருகிறோம். இன்னும் 60 நாட்களில் முழுமையான நிர்வாக மாற்றத்தை உங்கள் கண்முன்னே பார்ப்பீர்கள்.
முன்பு பொதுப்பணித்துறை என்றாலே, ஆற்றில் தூர்வாராமலேயே தூர்வாரியதாக பில் போடுவார்கள். இனி உண்மையாக பணிகள் நடக்கும். போலியாக பில் போடுவது, போலியான ஒப்பந்ததாரர்களை உருவாக்குவது, பினாமி நிறுவனங்களை உருவாக்குவது இனி இருக்காது. இது குறித்து ஆய்வு செய்து, அத்தகைய டெண்டர்களை நாங்கள் நிறுத்தி வைத்துள்ளோம். தேர்தலுக்கு முந்தைய ஒரு மாதத்தில் பழைய அரசு மீண்டும் வந்துவிடும் என்ற நம்பிக்கையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு டெண்டர் போட்டு அட்வான்ஸ் வாங்கியுள்ளனர். நெடுஞ்சாலைத்துறையிலும் இதே பிரச்சினை உள்ளது. இரு துறைகளையும் லாபகரமானதாக மாற்றும் வகையில் செயல்படுவோம். இன்று தமிழகத்தில் பல கிராமங்களில், மலைப்பகுதிகளில் சரியான சாலை வசதி இல்லை. இதனை சரி செய்வோம்” எனத் தெரிவித்துள்ளார்.