சேலம் விஜய் கூட்டத்தில் உடல்நிலை பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு: தவெக விளக்கம்

சேலம் விஜய் கூட்டத்தில் உடல்நிலை பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு: தவெக விளக்கம்
Updated on
1 min read

சென்னை: சேலத்தில் தவெக தலைவர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவர் உடல்நல பாதிப்பால் உயிரிழந்தார். இது குறித்து தவெக விளக்கம் அளித்துள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள சீலநாயக்கன்பட்டி அருகே உள்ள கே.வி.பி திடலில் தவெக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றிருந்தனர். இந்தக் கூட்டத்தில் 1 மணியளவில் விஜய் பேசத் தொடங்கினார்.

அதேசமயம், கூட்டம் நடைபெற்ற இடத்தில் கடுமையான வெயிலின் தாக்கம் இருந்தது. இதையடுத்து, பலர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், மகாராஷ்டிராவை சேர்ந்த வெள்ளி பட்டறை தொழிலாளியான சூரஜ் (37) என்பவர் மயங்கி கீழே விழுந்துள்ளார். பிறகு அவர் மயங்கிய நிலையில், அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அப்போது, அவர் வழிலேயே உயிரிழந்தார் என கூறப்படுகிறது. மாரடைப்பு காரணமாக சூரஜ் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தவெக இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தனது எக்ஸ் தள பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், “இன்று தவெக சார்பில் சேலத்தில் நடைபெற்ற கூட்டத்தைக் காண வந்த சூரஜ் என்ற இளைஞர் திடீர் உடல்நலக்குறைவால் மயங்கி உள்ளார்.

அவருக்கு உடனடியாக முதலுதவி செய்யபட்டு கழக நிர்வாகிகள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் மாரடைப்பால் சூரஜ் மரணமடைந்தது வேதனை அளிக்கிறது. இளைஞர் சூரஜின் இந்த எதிர்பாராத மரணத்துக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் விஜய் கூட்டத்தில் உடல்நிலை பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு: தவெக விளக்கம்
“வாக்குக்கு பணம்... அதை வாங்கிக் கொண்டு அவர்களின் காதில் விசில் ஊதுங்கள்!” - விஜய் பேச்சு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in