ஸ்டாலின் Vs நயினார் - ‘நாட்டு மக்களுக்கு தருவதாகச் சொன்ன ரூ.15 லட்சம் என்ன ஆனது?’

மகளிர் உரிமைத் தொகையை முன்வைத்து தமிழக சட்டப்பேரவையில் காரசார விவாதம்
ஸ்டாலின் Vs நயினார் - ‘நாட்டு மக்களுக்கு தருவதாகச் சொன்ன ரூ.15 லட்சம் என்ன ஆனது?’
Updated on
2 min read

சென்னை: ‘கோடை நிதியாக ரூ. 2000 தருகிறீர்கள்; 5 ஆண்டுகளில் 5 கோடை காலம் வந்ததே’ என சட்டமன்றத்தில் நயினார் நாகேந்திரன் எழுப்பிய கேள்விக்கு, ‘நாட்டு மக்களுக்கு ரூ.15 லட்சம் தருவதாக சொன்னீர்களே... என்ன ஆனது’ என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டப்பேரவையில் தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் மற்றும் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் ஆகியோர் இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

நயினார் நாகேந்திரனின் பல்வேறு கேள்விகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார். அப்போது நயினார் நாகேந்திரன், “பகுதிநேர ஆசிரியர் பணிநிரந்தரம், பழைய ஓய்வூதியம், நீட் தேர்வு ரத்து உட்பட பல்வேறு தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. நீட் தேர்வை திமுக, காங்கிரஸ்தான் கொண்டுவந்தது” என தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “மத்திய அரசு நினைத்தால் நீட் தேர்வை தற்போதுகூட ரத்து செய்ய முடியும். அதற்கு நீங்கள் முன்வருவீர்களா?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு நயினார் நயினார் நாகேந்திரன், “அதில் உள்ள சிரமங்களை உணர்ந்தே, அன்றைய மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா, முதல்வர் பழனிசாமி ஆகியோரால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 7.5 சதவீத இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது” என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய நயினார் நாகேந்திரன், “தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 5.71 சதவீதம் அதிகரித்துள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறி ஆகியுள்ளது” என கண்டனம் தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், “மணிப்பூர் கணக்கையும் சேர்த்து கூறினால் நன்றாக இருக்கும். பாஜக ஆளும் மாநிலங்களில் கலவரங்கள், மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகின்றன. தமிழகத்தில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு சிறப்பாக உள்ளதாக மத்திய அரசின் தரவுகளே தெரிவிக்கின்றன” எனத் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் பேசும்போது, “மகளிர் உரிமைத் தொகை வாங்கும் பெண்களுக்கு கோடைகால சிறப்பு நிதியாக ரூ.2,000 கொடுத்துள்ளீர்கள். 5 ஆண்டுகளில் 5 முறை கோடைகாலம் வந்தது. அப்போது ஏன் தரவில்லை?

தேர்தலுக்காக திட்டங்கள் தொடங்கப்படுவதில்லை என்கிறீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் கழித்துதான் ரூ.1000 வாக்குறுதி நிறைவேற்றப்பட்டது. மக்களவைத் தேர்தலின்போதுகூட கோடை சிறப்பு நிதி தரவில்லை. தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வரும்போதுதான் அறிவித்துள்ளீர்கள்” என தெரிவித்தார்.

அப்போது பேசிய முதல்வர், ‘ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்களுக்கு ரூ.15 லட்சம் தருவதாக சொன்னீர்களே. அது என்ன ஆனது? அதற்கு பதில் சொல்லிவிட்டு இதையெல்லாம் கேளுங்கள்.

மேலும், இந்த அறிவிப்பு வெளியானபோது நீங்கள் அளித்த பேட்டியை பார்த்தேன். ‘மோடி மஸ்தான்’ போல கொடுக்கப்பட்டதாக கூறினீர்கள். நீங்கள் பிரதமரை குறிப்பிட்டதாக நினைத்தேன்” என்றார்.

பின்னர் பேசிய நயினார் நாகேந்திரன், “மக்கள் நலனுக்காக போராடிவரும் பாஜக, ஆர்எஸ்எஸ் இயக்கங்கள் மீது பொது வெளியில் தொடர்ந்து அவதூறு பரப்பப்படுகிறது. நாட்டின் விடுதலைக்காகப் போராடிய ஆர்எஸ்எஸ் இயக்கம் தூய்மையானது. இன்றைக்கு மாநில சுயாட்சி குறித்து பேசும் திமுக, முந்தைய காலங்களில் மாநில சுயாட்சி தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்ததும், பின்னர் அதை திரும்பப் பெற்றதும் ஏன் என்பது அனைவருக்கும் தெரியும்” என்று அவர் கூறினார்.

ஸ்டாலின் Vs நயினார் - ‘நாட்டு மக்களுக்கு தருவதாகச் சொன்ன ரூ.15 லட்சம் என்ன ஆனது?’
100 நாள் வேலைத் திட்டம் வழக்கு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in