Published : 26 Oct 2017 09:38 AM
Last Updated : 26 Oct 2017 09:38 AM

மேட்டூர் அணை திறக்கப்பட்டு 23 நாட்களாகியும் கடைமடைக்கு நீர் வராததால் கொள்ளிடம் விவசாயிகள் வேதனை

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு 23 நாட்களாகியும் நாகை மாவட்டம் கொள்ளிடம் கடைமடை பகுதி சம்பா சாகுபடி பாசனத்துக்கு இதுவரை தண்ணீர் வந்து சேராததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் உள்ள கொள்ளிடம் பகுதி, டெல்டாவின் கடைமடைப் பகுதியாகும். இப்பகுதியில், 42 ஊராட்சிகளுக்கு உட்பட்ட 200 கிராமங்களில் 30 ஆயிரம் ஏக்கரில் சம்பா நெல் சாகுபடி மேற்கொள்ள விவசாயிகள் தீவிரம்காட்டி வருகின்றனர். டெல்டா மாவட்ட சம்பா சாகுபடி பணிகளுக்காக கடந்த 2-ம் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

ஆனால், மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் கடைமடைக்கு வருவது தாமதமாகும் என்பதை உணர்ந்த விவசாயிகள் பலரும் மின் மோட்டாரைப் பயன்படுத்தி 30 சதவீத நடவுப் பணிகளை முடித்துள்ளனர். 40 சதவீத நிலப்பரப்பில் சம்பா நேரடி விதைப்பும் செய்துள்ளனர். மீதமுள்ள 30 சதவீத நிலத்திலும் பயிர் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இந்த 3 நிலைகளில் மேற்கொள்ளப்படும் சம்பா சாகுபடிக்கு உடனடியாக தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால், மேட்டூர் அணை திறக்கப்பட்டு 23 நாட்கள் ஆகியும் இதுவரை கொள்ளிடம் பகுதிக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

இதுகுறித்து கொள்ளிடம் விவசாயிகள் சங்க கூட்டமைப்புச் செயலாளர் விஸ்வநாதன் கூறியபோது, “கொள்ளிடம் கடைமடைப் பகுதிக்கு வழங்க வேண்டிய தண்ணீரை பொதுப்பணித் துறை அதிகாரிகள் வழங்க மறுக்கிறார்கள். கடந்த ஆண்டு போல இந்த ஆண்டும் தண்ணீரை வழங்க மறுத்தால் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டங்களில் ஈடுபடுவோம்” என்றார்.

வடவாறு மூலம் வீராணத்துக்கு தண்ணீர் கொண்டுசெல்லும் நடவடிக்கை கடந்த ஆண்டைப் போலவே தற்போதும் நடைபெற்று வருவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியபோது, “டெல்டா மாவட்ட கடைமடை பாசனத்துக்காக தெற்கு ராஜன் வாய்க்காலில் இன்று (அக்.26) முறைப்படி தண்ணீர் திறக்கப்பட உள்ளது” என்றனர்.

வெண்ணாற்றில் நீர் திறப்பு

தஞ்சை மாவட்டம் வெண்ணாற்றில் தென்பெரம்பூர் தலைப்பில் இருந்து வடவாறு மற்றும் இரு வாய்க்கால்களில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து வெண்ணாற்றில் 500 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், கள்ளப்பெரம்பூர் அருகே தென்பெரம்பூரில் உள்ள வெண்ணாறு தலைப்பில் இருந்து பாசனத்துக்காக வடவாறு மற்றும் ராஜேந்திரம், ஜம்புகாவேரி ஆகிய வாய்க்கால்களில் நேற்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x