Published : 02 Jun 2023 06:00 AM
Last Updated : 02 Jun 2023 06:00 AM

மேகேதாட்டு விவகாரத்தை விட்டுக் கொடுக்கவே முடியாது: அமைச்சர் துரைமுருகன் உறுதி

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி குடிநீர் விநியோகம் குறித்த ஆய்வுக்கூட்டம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நேற்று நடைபெற்றது. அருகில், மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், மேயர் சுஜாதா ஆனந்தகுமார், ஆணையர் ரத்தினசாமி உள்ளிட்டோர்.

வேலூர்: மேகேதாட்டு விவகாரத்தை எந்த காலத்திலும் விட்டுக் கொடுக்கவே முடியாது என்று நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.நந்தகுமார், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் ரத்தினசாமி, துணை மேயர் சுனில்குமார் மற்றும் மண்டல குழு தலைவர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை சமாளிப்பது, மாநகராட்சியில் மேற்கொள்ள வேண்டிய புதிய சாலை பணிகள், குப்பை அகற்றுதல், புதிய பூங்காக்கள் அமைத்தல், பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‘‘வேலூர் மாநகராட்சியில் உள்ள மண்டலங்களில் என்னென்ன பணிகள் செய்ய வேண்டும் என்று ஆலோசிக்கப்பட்டது. தற்போது காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் பற்றாக்குறை இருப்பதால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. நாளை (இன்று) முதல் அந்த பணிகள் தொடங்கும். தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க மாநகராட்சி அதிகாரிகள் வேலை செய்வார்கள்.

கர்நாடக துணை முதல்வர் தமிழக அரசுடன் பேசினாலும் சரி, யாரிடம் பேசினாலும் சரி மேகேதாட்டு மட்டுமே காவிரி பிரச்சினை இல்லை. காவிரி பிரச்சினை 30 ஆண்டுகளாக எனக்கு தெரியும்.

காவிரி தீர்ப்பாயத்தை நடத்தியவன் நான். எனக்கு நீண்ட நெடிய அனுபவம் உள்ளது. காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் தர வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்ட தீர்ப்பாயத்திலும் அவர்கள் மேகேதாட்டு பிரச்சினையை எழுப்பவில்லை. உச்சநீதிமன்றத்திலும் எழுப்பவில்லை.

ஆகவே, இதெல்லாம் ஏதாவது ஒரு பிரச்சினைக்காக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். காவிரி விவகாரத்தில் எந்த காலத்திலும் தமிழ்நாடு விட்டுக் கொடுக்காது. அதில், உறுதியாக இருக்கிறோம். மேகேதாட்டுவில் விட்டுக் கொடுக்கவே முடியாது’’ என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x