Published : 02 Jun 2023 06:43 AM
Last Updated : 02 Jun 2023 06:43 AM
தமிழ்நாட்டின் பாரம்பரிய தொழில்களில் ஒன்றான நெசவுத் தொழிலை நம்பி பல லட்சம் குடும்பங்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். மாநிலம் முழுவதும் 18 கூட்டுறவு நூற்பாலைகளை அரசே நடத்தி வந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளில் பல்வேறு காரணங்களால் பல கூட்டுறவு நூற்பாலைகள் படிப்படியாக மூடப்பட்டன. இதில், வேலூர் மாவட்டத்தில் இயங்கி வந்த ஒரே ஒரு கூட்டுறவு நூற்பாலையும் அடங்கும்.
வேலூர் மாவட்டம் அரியூரில் இயங்கி வந்த மாவட்ட கூட்டுறவு நூற்பாலை கடந்த 1997-ல் மூடப்பட்டது. 26 ஆயிரத்து 656 கதிர்களுடன் கூடிய இந்த நூற்பாலையில் கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு தேவையான நூல்கள், டெரி காட்டன்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இந்த ஆலையை நம்பி நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆயிரக்கணக்கானவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.
மூடப்பட்ட அரியூர் நூற்பாலையை மீண்டும் திறக்க வேண்டும் என்பது பல கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆனால், தற்போது வரை அரியூர் நூற்பாலையை மீண்டும் இயக்க வேண்டும் என்ற கோரிக்கையும் கிடப்பில் இருந்து வருகிறது.
சிறிய ஜவுளி பூங்கா: வேலூர் மாவட்டத்தில் 50 சதவீத மானியத்துடன் கூடிய சிறிய அளவில் ஜவுளி பூங்கா அமைக்க சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதையொட்டி, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதலீட்டாளர்கள், தொழில்முனைவோர் ஆலோசனைக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது.
இதில், அரசின் செறிவூட்டிய புதிய ஒருங்கிணைந்த ஜவுளிக் கொள்கை 2019-ன்படி, குறைந்தபட்சம் 3 தொழிற்கூடங்களுடன் குறைந்தது 2 ஏக்கர் நிலத்தில் சிறிய அளவிலான ஜவுளி பூங்காக்கள் அமைப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேநேரம், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட அரியூர் கூட்டுறவு நூற்பாலையைத் திறக்கவும் அங்கு புதிதாக செயல்படுத்தப்பட உள்ள ஜவுளி பூங்காவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் சிலர் எழுப்புகின்றனர்.
இது தொடர்பாக வேலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் தயாநிதி கூறும்போது, ‘‘அரியூர் நூற்பாலையை கையகப்படுத்த முயற்சி நடந்தபோது நாங்கள் போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்தினோம். அங்கு 2 ஏக்கரில் மட்டும் சிறிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முடியாது. 2 ஏக்கர் நிலத்தை கொடுத்துவிட்டு மற்ற நிலத்தை தாரை வார்க்கும் முயற்சியாகவே கருதுகிறோம். திருப்பத்தூர் மாவட்டத்தில் பருத்தி விளைச்சல்
அதிகமாக உள்ளது. எனவே, அந்த பருத்தியை பயன்படுத்தி அரியூரில் கூட்டுறவு நூற்பாலையை மீண்டும் முழு அளவில் தொடங்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. அதேநேரம், சிறிய அளவிலான ஜவுளி பூங்காவை குடியாத்தத்தில் அமைப்பதுதான் பொருத்தமானது. அங்கு போதுமான அளவுக்கு நிலம் உள்ளது’’ என்று தெரிவித்தார்.
நூற்பாலைகள் தொடர்பாக நெசவுத் தொழில் முனைவோர் கூறும்போது, ‘‘தமிழ்நாட்டில் அரசு இயக்கி வந்த 18 கூட்டுறவு நூற்பாலைகளில் தற்போது தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் உள்ள பாரதி நூற்பாலை, ஆரல்வாய்மொழியில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஊத்தங்கரையில் உள்ள மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, சேலம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை, ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா கூட்டுறவு நூற்பாலை ஆகிய 5 ஆலைகள் மட்டுமே இயங்கி வருவதுடன் அதுவும் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. மீதமிருந்த 13 கூட்டுறவு நூற்பாலைகள் மூடப்பட்டுவிட்டன. இதில், வேலூர் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை கடந்த 1997-ம் ஆண்டும், விழுப்புரம் மாவட்ட கூட்டுறவு நூற்பாலை 1999-ம் ஆண்டும் முடப்பட்டன.
மற்றவை கடந்த 2003-ம் ஆண்டுக்குப் பிறகு மூடப்பட்டன. தமிழகத்தில் அரசின் கூட்டுறவு நூற்பாலைகள் மூடப்பட்ட அதேநேரத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் தனியார் நூற்பாலைகள் புதிதாக தொடங்கப்பட்டு லாபகரமாக இயங்கி வருகின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT