

சீமானின் ட்விட்டர் பக்கம் முடக்கம்: முதல்வர் ஸ்டாலின் கண்டனம்: நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோரின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். ட்விட்டர் முடக்கத்தை விலக்கிச் சமூக வலைதளத்தை அதற்கான தரத்துடன் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார். அவருக்கு சீமான் நன்றி கூறியுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் உடன் கேஜ்ரிவால் சந்திப்பு: டெல்லி மாநில அரசின் அதிகாரத்தைப் பறிக்கும் அவசர சட்டத்தை நிராகரிக்க ஆதரவு கோரி டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் ஆகியோர் வியாழக்கிழமை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்தனர்.
இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் “டெல்லி முதல்வருக்கும், அவர் சார்ந்திருக்கக் கூடிய ஆம் ஆத்மி கட்சிக்கும் நெருக்கடி ஏற்படுத்த வேண்டும் என்று மோடி தலைமையிலான பாஜக ஆட்சி முடிவு செய்துள்ளது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கக் கூடிய ஆட்சியை சுதந்திரமாக செயல்படவிடாமல், பல்வேறு நெருக்கடிகளைத் தொடர்ந்து அளித்து வருகிறது. அதுமட்டுமின்றி டெல்லியின் துணை ஆளுநர் மூலமாகவும் பல்வேறு தொல்லைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு டெல்லி மாநில அரசுக்கு சாதகமான ஒரு அழகான தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆனால், அது நிறைவேறக் கூடாது என்ற எண்ணத்தோடு ஆளும் பாஜக அரசு, அந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓர் அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறது. இந்த அவசர சட்டத்தை திமுக கடுமையாக எதிர்க்கும். அதில் எந்த மாற்றமும் கிடையாது. நிச்சயமாக அனைத்து மாநிலங்களின் முதல்வர்களும், அகில இந்திய அளவில் இருக்கக்கூடிய கட்சியின் தலைவர்களும் இதற்கு ஆதரவு தரவேண்டும் என்று இதன்மூலம் நான் கேட்டுக்கொள்ள கடமைப்படிருக்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
‘ஆவின் விவகாரத்தில் முதல்வர் தலையிட வேண்டும்’: ஆவின் பாலுக்கு இனி தட்டுப்பாடு ஏற்படாது; அனைத்து மாவட்டங்களிலும் ஆவின் பால் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் உறுதியளித்திருந்த நிலையில், வியாழக்கிழமை மீண்டும் ஆவின் பால் வழங்கல் பாதிக்கப்பட்டிருப்பது நியாயப்படுத்த முடியாத ஒன்றாகும். ஆவின் நிறுவன சிக்கலில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மேகேதாட்டு அணைக்கு தமிழக பாஜக எதிர்ப்பு: “கர்நாடக அரசு மேகேதாட்டு அணையை கட்ட முயற்சித்தால், நாங்கள் தடுத்து நிறுத்துவோம். மேகேதாட்டு நோக்கி நடைபயணம் நடத்தவும் தயாராக இருக்கிறோம்” என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
“தமிழக மரபுகளை பின்பற்றுவேன்”: "தமிழகத்தின் கலாச்சாரம், மரபுகளை பின்பற்றுவேன்" என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா கூறியுள்ளார்.
மணிப்பூர் வன்முறை: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு: பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக இரு வேறு இனக் குழுவினருக்கு இடையே மணிப்பூரில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறி அந்த மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்துள்ள நிலையில், அந்த வன்முறை தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
தமிழகத்துக்கு கர்நாடக அமைச்சர் டி.கே.சிவகுமார் விளக்கம்: மேகேதாட்டு அணை விவகாரத்தில் அண்டை மாநிலங்களான கர்நாடகா, தமிழக மக்கள், சகோதர, சகோதரிகள்போல் அணுக வேண்டும் என்று கர்நாடாக நீர்ப்பாசனத் துறை அமைச்சரும், அம்மாநில துணை முதல்வருமான டி.கே.சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "தமிழக சகோதரர்கள் மீது வெறுப்போ, கோபமோ இல்லை. நான் தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் இருவரும் அன்பான இதயம் கொண்டவர்கள். நம் இரு மாநில மக்களும் சகோதரத்துவத்துடன் வாழட்டும். ஒருவொருக்கொருவர் உதவி செய்து முன்னேறுவோம்" என்று கூறியுள்ளார்.
முன்னதாக, காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு அணையை கட்டுவதற்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவர் ஆணையிட்டிருந்தார். இதற்கு தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்பட பல்வேறு கட்சியினரும் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ராகுலின் குருநானக் கருத்தை குறிப்பிட்டு பாஜக கேள்வி: “முட்டாள்தனத்தின் பெயரால் இன்னும் எத்தனை முறைதான் உங்களை நாங்கள் மன்னிப்பது? குருநானக் தாய்லாந்து சென்றார் என்று நீங்கள் எங்கே வாசித்தீர்கள்?” என்று ராகுல் காந்திக்கு பாஜக கேள்வி எழுப்பி உள்ளது. மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு நடந்த கூட்டம் ஒன்றில் தனது இந்திய ஒற்றுமை யாத்திரையை குருநானக் உடன் ஒப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.
‘கோலியின் ஃபார்ம்... ஆஸ்திரேலியாவுக்கான எச்சரிக்கை’: வரும் 7-ம் தேதி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் நடப்பு ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளன. இந்நிலையில், இந்திய அணி வீரர் விராட் கோலியின் அபார ஃபார்ம், ஆஸ்திரேலிய அணிக்கு விடுக்கப்பட்டுள்ள அபாய எச்சரிக்கை என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் பயிற்சியின்போது ஐஏஎஃப் விமானம் விபத்து: இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சூர்ய கிரண் என்கிற பயிற்சி விமானம் கர்நாடகாவின் போகபுரா என்ற இடத்துக்கு அருகில் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. விமானம் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. எனினும், விமானம் தரையில் மோதுவதற்கு முன்பாக பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண் விமானி உட்பட இரண்டு விமானிகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த இந்திய விமானப் படை உத்தரவிட்டுள்ளது.