Published : 21 Oct 2017 11:44 AM
Last Updated : 21 Oct 2017 11:44 AM

டிஜிபி அலுவலகத்தில் வீரவணக்க நாள்: துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலி

பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு நாடு முழுதும் அக்.21 அன்று அஞ்சலி செலுத்தப்படுகிறது. சென்னையில் டிஜிபி அலுவலகத்தில் இன்று வீரவணக்க நாள் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் காவல்துறை மற்றும் முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் டிஜிபி. டி.கே.ராஜேந்திரன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர்த் தாக்குதலில் மத்தியப் பாதுகாப்புப் படைக் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி ‘காவலர் வீரவணக்க நாள்’ அனுசரிக்கப்படுகிறது.

அதன்பேரில், இன்று சென்னை காமராஜர் சாலையிலுள்ள தமிழகக் காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் கடந்த 1.9.2017 முதல் 31.8.2016 முடிய ஓராண்டு காலத்தில் இந்தியா முழுவதும் பணியின் போது வீர மரணமடைந்த 379 காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் டிஜிபி டி.கே.ராஜேந்திரன், மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து, மேற்கு வங்க ஆளுநரும் முன்னாள் டிஜிபியுமான எம்.கே.நாராயணன், முப்படையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வித்யான்சு ஸ்ரீவத்சவா, என்.நாகராஜன், ராஜன் பர்கோத்ரா, தீயணைப்புத்துறை டிஜிபி கே.பி.மகேந்திரன், டிஜிபி போக்குவரத்து ஊழல் தடுப்பு பிரிவு ஜாங்கிட், மனித உரிமை ஆணைய டிஜிபி காந்திராஜன், அதன் பின்னர் ஓய்வுப்பெற்ற டிஜிபிக்கள், அதை தொடர்ந்து சென்னை பெருநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் இயக்குநர்கள் லட்சுமி பிரசாத், தமிழ்ச்செல்வன், அஷுதோஷ் சுக்லா, கருணாசாகர், சென்னை மாவட்ட கலெக்டர் அன்புச்செல்வன், காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

டிஜிபி ராஜேந்திரன் பேசுகையில், கடந்த ஆண்டில் இந்தியாவில் பல பகுதிகளில் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது உயிரிழந்த காவலர்களின் பெயர்களை நினைவு கூர்ந்தார். பின்னர் வீரமரணமடைந்த காவலர்களுக்கு துப்பாக்கிக் குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற காவல் உயர் அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x