54,439 அங்கன்வாடி மையங்களில் மின்சாரம், கழிப்பறை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்

54,439 அங்கன்வாடி மையங்களில் மின்சாரம், கழிப்பறை கோரி வழக்கு: மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
Updated on
1 min read

தமிழகம் முழுவதும் அங்கன்வாடி மையங்களில் மின்சாரம், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றித்தர உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவுக்கு பதிலளிக்குமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை கிருஷ்ணாபுரம் காலனிsயைச் சேர்ந்த சி.ஆனந்தராஜ், சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவின் விவரம்:

தமிழகத்தில் மொத்தமுள்ள 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்களில் 55 சதவீத மையங்கள் கழிப்பறை வசதியின்றியும், 80 சதவீத மையங்கள் மின் வசதி இல்லாமலும் உள்ளன. அங்கன்வாடி மையங்களில் சுத்திகரிக்கப்படாத குடிநீர் வழங்கப்படுகிறது. இதை குடிக்கும் குழந்தைகள் அடிக்கடி உடல் நலக் குறைவுக்கு ஆளாகின்றனர்.

பெரும்பாலான மையங்களில் விறகை பயன்படுத்தி சமைப்பதால் மையத்துக்குள் புகை பரவி குழந்தைகளுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. அங்கன்வாடியில் ஒவ்வொரு குழந்தைக்கும் நாள் ஒன்றுக்கு காய்கறிக்கு 25 பைசா மட்டுமே ஒதுக்கப்படுகிறது. காய்கறி விலை பல மடங்கு உயர்ந்திருக்கும்போது, 25 பைசாவுக்கு ஊட்டச் சத்தான உணவு வழங்குவது சாத்தியமற்றது. அங்கன்வாடி பணியாளர்கள் வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படுவதால் குழந்தைகளை பராமரிக்கும் பணியில் முழுமையாக ஈடுபட முடியவில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

எனவே, அங்கன்வாடி மையங்களில் உள்ள வசதி குறித்து மாவட்ட அளவில் குழு அமைத்து ஆய்வு நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும். அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் தண்ணீர் வசதியுடன் கழிப்பறை, மின்வசதி ஏற்படுத்தவும், குழந்தைகளுக்கு காய்ச்சிய குடிநீர் வழங்கவும், குழந்தைகளுக்கு மதிய உணவுக்கு முன்பும், பின்பும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பானம் வழங்கவும், காய்கறிக்கான 25 பைசாவை ரூ. 2 ஆக உயர்த்தவும் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் எம்.ஜெயச்சந்திரன், ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார்.

இம்மனுவுக்கு 4 வாரத்தில் பதிலளிக்க மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை முதன்மைச் செயலர், தமிழக சமூக நலத்துறை மற்றும் மதிய உணவுத் திட்ட செயலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in