

தருமபுரி: மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்படும் விதம் கண்டனத்துக்கு உரியது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பங்கேற்க அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தருமபுரி வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ''முதல்வர் ஸ்டாலின் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்று தொழில் முதலீடுகளை ஈர்த்து பல ஆயிரம் இளையோருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி வந்திருக்கிறார். இதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகளையும், பாராட்டையும் தெரிவிக்கிறது.
இந்திய நாடாளுமன்றத்துக்கான புதிய கட்டிட திறப்பு விழா தேதியை, குறிப்பிட்ட காரணங்களுக்காக மாற்றக் கோரினோம். இருப்பினும், சர்ச்சைக்குரிய அந்த தினத்தில் திறப்பு விழா நடந்துள்ளது. நாட்டின் முதல் குடிமகன் என்ற நிலையில் உள்ள குடியரசு தலைவர் திரவுபதி முர்மு இந்த விழாவுக்கு அழைக்கப்படாததற்கு காரணம், மத்தியில் ஆட்சியில் உள்ளவர்களின் மனு தர்ம தத்துவம்தான். அதன்படிதான், அவர் பெண் என்பதாலும், பழங்குடியினத்தவர் என்பதாலும், விதவை என்பதாலும் அவரை தவிர்த்துள்ளனர்.
மகாபாரதக் கதைகளை நம்புவோர் இன்று ஆட்சியில் உள்ளனர். அந்த பாரதக் கதையில் திரவுபதிக்கு அநீதி நேர்ந்ததைப் போல இன்றைய ஆட்சியில் குடியரசுத் தலைவர் திரவுபதிக்கும் அநீதி செய்யப்பட்டுள்ளது. இதைக் கண்டிக்க ஜனநாயக சக்திகள் அனைவரும் முன்வர வேண்டும். இந்தியாவில் மன்னராட்சி என்றோ முடிவுக்கு வந்து விட்டது. இந்நிலையில், செங்கோலை வைத்து நாடகம் நடத்தி மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர். மொத்தத்தில், நாடாளுமன்ற புதிய கட்டிட திறப்பு விழாவில் மதச் சார்பின்மை கொள்கை புதைக்கப்பட்டுள்ளது. மாமன்னராக தன்னை நினைத்துக் கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்திருக்கும் நிகழ்வு உலக அரங்கில் இந்தியாவுக்கு அவமரியாதையை ஏற்படுத்தி உள்ளது.
மல்யுத்த வீராங்கனைகள் நடத்தப்படும் விதம் கண்டனத்துக்கு உரியது. குற்றச்சாட்டுக்கு உள்ளானவரை (இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்.பி.யுமான பிரிஜ் பூஷன்) பாஜக அரசு காப்பாற்றுகிறது.
கர்நாடக மாநிலத்தில் எந்தக் கட்சியின் ஆட்சி நடந்தாலும் காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டும் முயற்சியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கும். தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் மேகேதாட்டுவில் ஒருபோதும் அணை கட்ட முடியாது.
தமிழகத்தில் செயல்படும் 3 அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதலாண்டு மாணவர் சேர்க்கை ரத்து நடவடிக்கையால் 500 மாணவர்களின் படிப்பு பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அநீதியான இந்த நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டிக்கிறது.
உள்ளாட்சித் துறைகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஆஷா பணியாளர்கள் ஆகியோரின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
கவிஞர் வைரமுத்து தொடர்பான விவகாரங்கள் குறித்து பேசி வரும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஓர் அக்கப்போர் ஆசாமி, அவர் இன்னொரு சுப்பிரமணியசாமி.
அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் தொடர்ந்து வருமான வரித்துறை நடத்தும் சோதனை காழ்ப்புணர்ச்சி வகையைச் சேர்ந்தது. உப்பு தின்றிருந்தால் செந்தில்பாலாஜி உட்பட யாராக இருந்தாலும் தண்ணீர் குடித்துத் தான் ஆக வேண்டும். தவறு நடந்திருந்தால் நடவடிக்கை எடுக்கட்டும். அதில் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், ஆளும்கட்சி தொடர்புடையவர்கள் மீது மட்டும் இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது அதிகார அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் நடைமுறை ஆகும். இதை கண்டிக்கிறோம்'' என்று கூறினார்.
இந்நிகழ்ச்சியின்போது, கட்சியின் மாவட்ட செயலாளர் கலைச்செல்வன், முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராசன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனர்.