டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு: திருமாவளவன் கண்டனம் 

திருமாவளவன் | கோப்புப் படம்
திருமாவளவன் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: டெல்லி அதிகாரம் தொடர்பான அவசர சட்டம் அப்பட்டமான நீதிமன்ற அவமதிப்பு என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்..

இது தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத் தான் அதிகாரம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தேசிய தலைநகரில் நிர்வாகத்தை யார் கட்டுப்படுத்துகிறார்கள் என்கிற விவகாரத்தில் டெல்லி அரசுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் மே 11-ம் தேதி ஒருமனதாக தீர்ப்பளித்தது.

இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, டெல்லியில் சட்டமியற்றும் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்ட பகுதிகளைத் தவிர, சேவை நிர்வாகத்தில் நிர்வாகத்தின்மீது சட்டமன்றத்துக்கே அதிகாரம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பொது ஒழுங்கு, காவல் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்கள் டெல்லி அரசின் கட்டுப்பாட்டுக்கு வெளியே உள்ளன என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆளுநரை வைத்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆம் ஆத்மி அரசாங்கத்தை செயல்படவிடாமல் தடுத்துக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்திற்கு இந்த தீர்ப்பு மிகப்பெரிய அடியாக விழுந்தது.

அதை பொறுத்துக் கொள்ளாத மோடி அரசு உடனடியாக உச்ச நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யும் விதமாக அவசர சட்டம் ஒன்றை பிறப்பித்துள்ளது. இது அப்பட்டமாக நீதிமன்றத்தை அவமதிப்பதாகும். இந்த ஜனநாயக படுகொலையை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மோடி அரசு இந்த அவசர சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

மோடி அரசின் இந்த தாக்குதல் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசுக்கு எதிரானது மட்டும் இன்றி ஒட்டுமொத்த நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கும் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரானதாகும். இதனைக் கண்டிக்க அனைத்து ஜனநாயக சக்திகளும் ஓரணியில் திரள வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுகிறோம்." இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in