பொறியியல் கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் தமிழ் மொழிப் பாடத்தை கட்டாயமாக்க வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ் | கோப்புப் படம்
ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: வரும் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் தமிழ் மொழிப் பாடத்தை இரண்டாம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது பருவங்களுக்கும் கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: "தமிழகத்தில் இளநிலை பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளின் முதல் இரு பருவங்களில் தமிழ் மொழிப் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றைக் கற்பிக்க அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயித்துள்ள கல்வித் தகுதியை கொண்டுள்ள தமிழாசிரியர்களை அமர்த்த வேண்டும்
என்று அண்ணா பல்கலைக்கழகம் ஆணையிட்டிருக்கிறது.

தமிழ் மொழிப் பாடம் பயனுள்ள வகையில் கற்பிக்கப்படுவதை உறுதி செய்வதற்கான இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தமிழகத்தில் பொறியியல் படிப்புகளின் முதலாம் ஆண்டில் தமிழ் மொழியை கட்டாயப்படமாக தமிழக அரசு அறிவித்தது பாராட்டத்தக்க நடவடிக்கை ஆகும். ஆனால், தமிழ்ப் பாடங்களை கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் கடந்த ஆண்டே அமர்த்தப்படாதது தான் பல பாதிப்புகளுக்கு காரணமாக அமைந்தது.

தமிழ் மொழிப் பாடத்தை ஆங்கிலத்தில் எழுத அனுமதித்தது, தேர்வு விடைத்தாள்களை அறிவியல், கணிதம் மற்றும் உடற்கல்வியியல் ஆசிரியர்களைக் கொண்டு திருத்தச் செய்தது ஆகிய அனைத்துக்கும் தமிழாசிரியர்கள் அமர்த்தப்படாதது காரணம் ஆகும். அந்தக் குறைபாட்டை நான் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்த நிலையில் இப்போது சரி செய்யப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

பொறியியல் படிப்பில் தமிழ் மொழி கட்டாயப் பாடத் திட்டத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. அதன்படி நடப்புக் கல்வியாண்டில் முதலாம் ஆண்டின் முதல் இரு பருவங்களுக்கு மட்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ள தமிழ் மொழிப் பாடத்தை வரும் கல்வியாண்டில் இரண்டாம் ஆண்டின் மூன்றாவது மற்றும் நான்காவது பருவங்களுக்கும் கட்டாயமாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ராமதாஸ் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in