

சென்னை: தமிழகத்தை உலக அளவில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்வதே லட்சியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பத்தாண்டுகால இருட்டை விரட்டி, விடியலைத் தந்து கொண்டிருக்கிறது திராவிடமாடல் அரசு. தொழில்வளம் பெருகி,வேலைவாய்ப்பும், உற்பத்தியும் அதிகரித்தால்தான் பொருளாதாரம் முன்னேறும். அதற்காகத்தான் சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்குச் சென்றேன். பயணத்தை வெற்றிகரமாக முடித்து, தமிழகம் திரும்புகிறேன்.
சிங்கப்பூரில் முக்கிய நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாளர்கள், தொழில் அமைச்சர் ஈஸ்வரன், சட்டத் துறை அமைச்சர் சண்முகம் உள்ளிட்டோரை சந்தித்து, தமிழகஅரசின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களையும், தொழில் வாய்ப்புகளையும் விளக்கி, தொழில் முதலீடு செய்ய வலியுறுத்தினேன்.
அங்கிருந்து ஜப்பானின் ஒசாகாவுக்குச் சென்றேன். அங்கு டைசல்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. முதலீட்டாளர் கருத்தரங்கில், தமிழகத்தில் உள்கட்டமைப்புத் துறைகளில் முதலீடுசெய்யுமாறு ஜப்பானிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தேன். ஒசாகாவில் கோமாட்சு தொழிற்சாலைக்குச் சென்று, ஒரகடத்தில் உள்ள அந்நிறுவன இயந்திர உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்யுமாறு அழைப்பு விடுத்தேன்.
ஒசாகாவிலிருந்து புல்லட் ரயில் பயணத்தில், இரண்டரை மணி நேரத்தில் 500 கிலோமீட்டரைக் கடந்து டோக்கியோ சென்றோம். ஜப்பானில் பொதுப் போக்குவரத்தில் ரயில் முக்கியப் பங்காற்றுகிறது.
இந்தியாவில் நிறைவேற்றப்படாத ரயில்வே திட்டங்கள் நிறையஉள்ளன. குறிப்பாக, தமிழகத்துக்கான ரயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அறிவிக்கப்பட்ட திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைவாக உள்ளதை மத்திய ஆட்சியாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
டோக்கியோவில் ஜெட்ரோ தலைவருடன் சந்திப்பு, 250 தொழில் நிறுவன தலைமை பொறுப்பாளர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கம் உள்ளிட்டவற்றில் பங்கேற்று, முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்தேன். பின்னர், ஜப்பான் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர், டோக்கியோவில் உள்ளஉலகின் 3-வது உயரமான `ஸ்கைட்ரீ' கட்டிடத்துக்குச் சென்றபோது, தமிழகத்தை உலக அளவில் உயர்ந்த இடத்துக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்ற லட்சியம் மனதில் தோன்றியது. கடல் கடந்த பயணத்தால், தமிழகத்தின் நிலை உயரும் என்ற நம்பிக்கை உள்ளது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிபோல இல்லாமல், தமிழகம் மாறியிருக்கிறது. தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுகிறது என்ற நம்பிக்கையை, முதலீட்டாளர்கள் மனதில்ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி உருவாக்கிய நவீனத் தமிழகத்தை, நாட்டின் முதன்மை மாநிலமாக உயர்த்திக் காட்டுவோம். இவ்வாறுமுதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.