

சென்னை: சுரானா குழுமத்துக்குச் சொந்தமான, ரூ.124 கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை சவுகார்பேட்டையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சுரானா குழுமம், தங்க மொத்த வியாபாரம், சூரிய மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் குழுமம் நான்கு வங்கிகளில் சுரானா இண்டஸ்ட்ரியல் லிமிடெட் என்ற பெயரில் ரூ.1,302 கோடி, சுரானா பவர் கார்ப்பரேஷன் பெயரில் 1,496 கோடி, சுரானா கார்ப்பரேஷன் பெயரில் ரூ.1,189 கோடி என மொத்தம் ரூ.3,986 கோடி கடன் பெற்றுள்ளது.
எனினும், கடனுக்கு வட்டியும், முதலும் திருப்பிச் செலுத்தாமல் அந்த நிறுவனம் மோசடி செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும், வாங்கிய நோக்கத்துக்காக கடன் தொகையைப் பயன்படுத்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட வங்கிகள் சார்பில் கொடுத்த புகாரின் அடிப்படையில், சிபிஐ வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்கு பதிவு செய்தது. மேலும், சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களையும், ஆதாரங்களையும் திரட்டும் வகையில், 2021 பிப்ரவரியில் அமலாக்கத் துறைசுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான 20 இடங்களில் சோதனை நடத்தியது. இதில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சுரானா நிறுவனத்தின் நிர்வாகிகள் தினேஷ் சந்த் சுரானா, விஜய்ராஜ் சுரானா, ஊழியர்கள் ஆனந்த், பிரபாகரன் ஆகிய 4 பேரையும் கடந்த ஆண்டு ஜூலை 12-ம் தேதி அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
பின்னர், சுரானா நிறுவனத்துக்குச் சொந்தமான சொத்துகளை, சட்டவிரோதப் பணப் பரிமாற்றச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் முடக்கி வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக, அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ரூ.124 கோடிமதிப்புள்ள, 78 அசையா சொத்துகளையும், 16 அசையும் சொத்துகளையும் முடக்கியதாக அமலாக்கத் துறையினர் நேற்று தெரிவித்தனர்.