

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படும் பம்ப்செட், மோட்டார், ரயில்வே உபகரணங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் நாடு முழுவதும் தேவையை பூர்த்தி செய்து வந்தன. மேற்குறிப்பிட்ட பொருட்கள் உற்பத்திக்கு முக்கியமாக தேவைப்படும் மூலப்பொருட்கள் பெரும்பாலும் குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்களில் இருந்து தான் பெறப்படுகின்றன.
இந்நிலையில், நாட்டின் மொத்த பம்ப்செட் தேவையில் முன்பு 65 சதவீத பங்களிப்பு கொண்டிருந்த நிலையில் தற்போது கோவை தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு 50 சதவீதமாக குறைந்துள்ளது. தவிர, ரயில்வே துறைக்கு போத்தனூர் தொழிற்சாலையில் இருந்து வழங்கப்பட்டு வந்த உபகரணங்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாகவும், இதனால் மாதாந்திர வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரயில்வே விநியோகஸ்தர்கள் சங்கத்தின் (ராசா) தலைவர் சுருளிவேல் கூறியதாவது: தமிழகத்தில் உயர்த்தப்பட்ட மின் கட்டணம், தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தொழில் நிறுவனங்களில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மோட்டார், பம்ப், ரயில்வே உபகரணங்கள் தயாரிப்பு உள்ளிட்டவற்றில் குஜராத், உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல வட மாநிலங்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்த தொடங்கியுள்ளன.
ரயில்வே உபகரணங்கள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தை பொறுத்தவரை போத்தனூரிலுள்ள தொழிற்சாலையில் இருந்து மாதந்தோறும் 10 ஆயிரம் பாயின்ட் இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்படுவது வழக்கம். ஒரு பாயின்ட் இயந்திரத்தின் விலை ரூ.1.20 லட்சம். எனவே, மாதந்தோறும் ரூ.10 கோடிக்கு மேல் வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், தற்போது 4 ஆயிரம் பாயின்ட் இயந்திரங்கள் மட்டுமே தயாரிக்க பணி ஆணைகள் வழங்கப்படுகின்றன. இதனால் மாதாந்திர வர்த்தகம் ரூ.4 கோடியாக குறைந்துள்ளது.
கோவைக்கு வழங்கப்பட்டு வந்த பணி ஆணைகளை குஜராத், உத்தரபிரதேசம், மஹாராஷ்டிரா, தெலங்கானா உள்ளிட்ட பல மாநிலங்கள் பெற தொடங்கியுள்ளன. இந்நிலை நீடித்தால் எதிர்வரும் நாட்களில் ரயில்வே துறையில் உபகரணங்களுக்கான தேவையில் கோவை தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு கணிசமாக குறைந்துவிடும். தவிர பம்ப்செட், மோட்டார் உள்ளிட்ட இதர பொருட்கள் தயாரிப்பிலும் வட மாநிலங்களின் ஆதிக்கம் மேலோங்கிவிடும். தமிழ்நாடு அரசு மின் கட்டணத்தை குறைக்கவும், தொழிலாளர்கள் பற்றாக்குறை, மூலப்பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாயின்ட் இயந்திரம்: ரயில் தண்டவாளங்களில் குறிப்பிட்ட இடைவெளியில் பாயின்ட் இயந்திரங்கள் பொருத்தப்படும். ரயில் திரும்புவதற்கு இந்த உபகரணங்கள் உதவுகின்றன. இதை எலக்ட்ரிக் பாயின்ட் மெஷின் என்று அழைப்பார்கள். ரயில் திரும்புவதற்கு மட்டுமின்றி ரயிலை பாதுகாப்பாக இயக்குவதிலும் இந்த உபகரணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.