Published : 01 Jun 2023 06:00 AM
Last Updated : 01 Jun 2023 06:00 AM
சென்னை: போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கும் வகையில், ரேடார் அமைப்பு, நவீன கேமராவுடன் கூடிய ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்இயக்கத்தை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
சென்னையில் விபத்து, போக்குவரத்து நெரிசல், விதிமீறல்களைக்கட்டுப்படுத்த போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டிவருபவர்களை கண்டுபிடிக்க, போக்குவரத்துப் போலீஸாருக்கு புதிதாக 50 ப்ரீத் அனலைசர் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
விதிமீறல் வாகன ஓட்டிகளை படம் பிடிக்க சென்னையில் யானைகவுனி, வேப்பேரி, திருவல்லிக்கேணி, அண்ணா சாலை, மயிலாப்பூர், ராயப்பேட்டை, கோயம்பேடு, கிண்டி உள்ளிட்ட 11 இடங்களில் 15 ஏஎன்பிஆர் (Automatic Number-Plate Recognition) என்ற அதிநவீன தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமரா இல்லாத இடங்களில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும்வாகனங்களை படம் பிடித்து அபராதம் விதிக்க வசதியாக, நவீன கேமரா (ஏஎன்பிஆர் கேமரா)பொருத்தப்பட்ட 2 வாகன இடைமறிப்பு `இன்டர்செப்டர்’ ரோந்து வாகனங்கள் தென் இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை போக்குவரத்து காவல் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இந்த வாகனத்தில் உள்ள கேமரா 360 டிகிரியில் சுழன்று, இரவிலும் விதிமீறல் வாகனங்ளை துல்லியமாக படம் பிடிக்கும். 200 மீ.தொலைவில் அதிவேகமாக செல்லும் வாகன எண்ணைக்கூட இந்த கேமரா படம் பிடிக்கும். தேவைப்படும் இடங்களுக்கு இந்த வாகனத்தை கொண்டு சென்று நிறுத்தலாம்.
இதேபோல, போக்குவரத்து விதிகள் தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நேப்பியர் பாலம் மற்றும் அண்ணா சதுக்கம் இடையே மாநகராட்சி, ஸ்மார்ட் சிட்டி நிறுவனம் சார்பில் ரூ.2.07 கோடியில் கட்டப்பட்டுள்ள போக்குவரத்துப் பூங்கா தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ளது. இது சிறுவர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் சாலை விதிகள், பாதுகாப்பாக வாகனம் ஓட்டுவது குறித்து தெரிந்துகொள்ள உதவும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
புதிய ரோந்து வாகனங்கள் மற்றும் பேரிகேட் ப்ளிங்கர் விளக்கு உள்ளிட்டவற்றை போக்குவரத்து போலீஸாரிடம் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று ஒப்படைத்தார். மேலும், அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கேமராக்கள்அடங்கிய இன்டெர்செப்டர் வாகனங்களின் செயல்பாட்டை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.
இதுதவிர, போக்குவரத்துப் பூங்காக்களில் மாணவர்கள் பயன்படுத்துவதற்கான சைக்கிள்களை வழங்கினார். பின்னர் காவல் ஆணையர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்து காவல் துறையில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் புகுத்தி வருகிறோம். மேலும், சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
வாகன ஓட்டிகள் சிக்னலுக்காக காத்திருக்கும் நேரத்தை மகிழ்வுடன் கழிக்க, 105 சாலை சந்திப்புகளில் மியூசிக் சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.
போக்குவரத்து காவல் அதிகாரிகள் வெளி மாநிலங்களுக்குச் சென்று, அங்கு பயன்படுத்தப்படும் நவீனக் கருவிகள், தொழில்நுட்பங்களை அடையாளம் கண்டு, அவற்றை சென்னை போக்குவரத்து காவல் துறையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நவீன கேமரா, 2-டி ரேடார்அமைப்புடன் கூடிய இன்டெர்செப்டர் வாகனம் தென் இந்தியாவிலேயே முதல்முதலாக சென்னையில் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு காவல் ஆணையர் தெரிவித்தார்.
நேப்பியர் பாலம் மற்றும் அண்ணா சதுக்கம் இடையே உள்ள போக்குவரத்துப் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் கபில் குமார் சி.சரத்கர், துணை ஆணையர்கள் சரவணன், சக்திவேல், சமய் சிங் மீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT