Published : 01 Jun 2023 06:50 AM
Last Updated : 01 Jun 2023 06:50 AM

சென்னை புறநகர் பகுதி ஜிஎஸ்டி சாலையில் நிழற்குடை இல்லாமல் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் பயணிகள்

மறைமலை நகர் பகுதி ஜிஎஸ்டி சாலையில் பயணியர் நிழற்குடை இல்லாததால் வெயிலை தாங்க முடியாமல் நிழலுக்கு ஒதுங்கி நின்றிருந்த பயணிகள் பேருந்தை பிடிக்க சாலையின் குறுக்கே ஓடிவருகின்றனர்.படம்:எம்.முத்துகணேஷ்

சென்னை: சென்னை புறநகர் பகுதி ஜிஎஸ்டி சாலை விரிவாக்கத்துக்காக பயணியர் நிழற்குடைகள் அப்புறப்படுத்தப்பட்டதால் பெருங்களத்தூர் முதல் செங்கல்பட்டு வரை பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் தினமும் வெயிலில் வாடி வதங்கி வருகின்றனர்.

ஒரு காலத்தில் சென்னை மாநகரின் நுழைவுவாயிலாக தாம்பரம் இருந்தது. காலப்போக்கில் புறநகர் பகுதிகளின் அசுர வளர்ச்சியின் காரணமாக சென்னையின் நுழைவுவாயிலாக செங்கல்பட்டு உருவெடுத்தது. தாம்பரம் தொடங்கி செங்கல்பட்டு வரையில் பீக் அவர்ஸ் என சென்னை புறநகர் பகுதி ஜிஎஸ்டி சாலையில் காலை மற்றும் மாலை வேளைகளில் மட்டுமின்றி மதிய வேளையிலும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.

போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையுள்ள ஜிஎஸ்டி சாலையை 8 வழிச்சாலையாக மாற்ற முடிவுசெய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து, பெருங்களத்தூர் முதல் கூடுவாஞ்சேரி வரை, கூடுவாஞ்சேரி முதல் பரனூர் வரை என 2 கட்டங்களாக சுமார் ரூ.250 கோடி செலவில் சாலை விரிவாக்கப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பெருங்களத்தூர், வண்டலூர், சிங்கப்பெருமாள்கோவில் ஆகிய இடங்களில் மேம்பாலங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.

எட்டு வழிச்சாலை.. எட்டு வழிச்சாலை விரிவாக்கத்துக்காக பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில், பரனூர் ஆகிய இடங்களில் சாலையோர பயணியர் நிழற்குடைகள் அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டன. அதோடு சாலையோரங்களில் கம்பீரமாக நின்ற பசுமைமிகு மரங்களும் அகற்றப்பட்டன.

தற்போது மே மாதத்தில் அக்கினி வெயில் கொளுத்தி வரும் நிலையில் பயணியர் நிழற்குடைகள் இல்லாததால் பேருந்து ஏற வரும் பயணிகள் வெட்டவெயிலில் வாடி வதங்குவது பரிதாபமாக இருக்கிறது. அதிலும் குழந்தைகள், வயதானவர்கள் படும்பாட்டை சொல்லவே வேண்டாம்.

பேருந்துக்காக நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படும்போது ஒதுங்க நிழலும் இல்லாமல் உட்கார இருக்கை வசதியும் இல்லாமல் அவஸ்தைப்படும் அவர்களின் நிலை மிகுந்த வேதனை அளிக்கிறது. பெருங்களத்தூர் தொடங்கி செங்கல்பட்டு வரை அனைத்து இடங்களிலும் இதே பரிதாப நிலைதான்.

மறைமலைநகர் உட்பட சில இடங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் சிறிய அளவில் தற்காலிக பந்தல்கள் தென்னந்தட்டிகளைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளன. அதிலும் மிகக்குறைந்த எண்ணிக்கையிலானவர்கள் மட்டுமே நிற்க முடியும். கூட்டம் அதிகமாக இருந்தால் பெரும்பாலானோர் வெளியில் வெயிலில்தான் நின்றாக வேண்டும்.

வெயிலில் நீண்ட நேரம் நிற்பதால் உடல் சோர்வுக்கு ஆளாகிறார்கள். காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிறார்கள். அதேபோல் அந்த சமயத்தில் பேருந்தில் இருந்து இறங்கும் பயணிகள் தங்களை சற்று ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும் நிழற்குடை இல்லை.

புறநகர் பகுதிகளுக்கு மின்சார ரயில் சேவை இருந்தாலும் கணிசமானோர் இன்னும் சாலை மார்க்கமாக பேருந்தில் பயணம் செல்வதையே விரும்புகிறார்கள். செல்ல வேண்டிய இடம் பேருந்து நிறுத்தத்தை ஒட்டி உள்ளதால் அவ்வாறு பேருந்து பயணத்தை நாடுகின்றனர்.

பெருங்களத்தூர், வண்டலூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, மறைமலைநகர் பகுதிகளில் இருந்து மகேந்திரா சிட்டி, பரனூர் பகுதிகளுக்கு வேலைக்காகச் செல்வோர் சாலை மார்க்கமாக பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களில்தான் பயணம் செல்கிறார்கள்.

அதேபோல் மறைமலைநகர், சிங்கப்பெருமாள்கோவில், பொத்தேரி, வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் ஆகியஇடங்களுக்கு வேலைக்காக வருவோரும், கல்லூரி மாணவ, மாணவிகளும் பேருந்துகள் மற்றும் ஷேர் ஆட்டோக்களைத்தான் நம்பியுள்ளனர்.

காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்துகளிலும், ஷேர் ஆட்டோக்களிலும் கூட்டம் நிரம்பிவழிவதே இதற்குச் சான்று. இந்த பயணிகள் பேருந்து மற்றும் ஷேர் ஆட்டோக்களுக்களை எதிர்பார்த்து காத்து நிற்க வேண்டியுள்ளது. தற்போது அந்த இடங்களில் பயணியர் நிழற்குடைகளே இல்லாததால் பயணிகள் நீண்ட நேரம் வெயிலில்தான் நின்றுகொண்டிருக்கிறார்கள்.

இதுகுறித்து ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, பொத்தேரி, காட்டாங்கொளத்தூர், மறைமலைநகர் பகுதிகளைச் சேர்ந்த ஆட்டோஓட்டுநர்கள், சாலையோர கடை வியாபாரிகள் கூறும்போது, "சாலையை அகலப்படுத்துகிறோம் என்று சொல்லி அனைத்து நிழற்குடைகளையும் அகற்றிவிட்டனர்.

நன்கு நிழல் தந்துகொண்டிருந்த சாலையோர மரங்களையும் வெட்டிவிட்டனர். எனவே, பயணிகள் தினமும் வெயிலில்தான் காத்து நிற்கிறார்கள். ஒருபுறம்அக்கினி வெயில், இன்னொருபுறம் கடுமையான புழுக்கம். இந்த பரிதாப நிலையால் குழந்தைகள், வயதானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்" என ஆதங்கப்பட்டனர்.

பயணிகள் சிலர் கூறும்போது, "சாலையை அகலப்படுத்துவதற்காக சாலையோர நிழற்குடைகளை அகற்றியுள்ளனர். சாலை பணிகள் முடிவடைந்து நிரந்தர பயணியர் நிழற்குடைகள் நிறுவப்படும் வரை பயணிகள் பாதிக்கப்படாமல் இருக்க தற்காலிக நிழற்குடைகள் அமைக்கப்பட்டால் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். இதை கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர்.

தாம்பரம் - செங்கல்பட்டு ஜிஎஸ்டி சாலையைப் போன்று சென்னை–பெங்களூரு நெடுஞ்சாலையிலும் இதேபோன்ற நிலைதான் காணப்படுகிறது. இதனால் பயணிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். சாலை அலப்படுத்துவது என்பது காலத்தின் கட்டாயம். அதேநேரத்தில் அந்த பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் சிரமத்தையும் போக்க வேண்டியது சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் தலையாய கடமையாகும்.

நெடுஞ்சாலை ஆணையம்தான் பொறுப்பு: தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ஜிஎஸ்டி சாலை விரிவாக்கத்துக்காக பெருங்களத்தூர் தொடங்கி செங்கல்பட்டு வரை பயணிகள் நிழற்குடைகள் அகற்றப்பட்டுள்ளன. சாலை பணிகள் முடிவடைந்த பிறகு புதிய நிழற்குடைகளை அமைப்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையமா அல்லது சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி ஆணையர் இளம்பருதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

எங்கள் நகராட்சி பகுதியில் 4 பயணியர் நிழற்குடைகள் அகற்றப்பட்டன. புதிய நிழற்குடைகள் அமைக்க வேண்டியது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் பொறுப்பு. இதில் உள்ளாட்சி அமைப்புகள் எதுவும் செய்ய இயலாது.

ஜிஎஸ்டி சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளன. பணிகள் முடிந்ததும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைவில் புதிய பயணியர் நிழற்குடைகள் அமைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். கூடுவாஞ்சேரி ஜிஎஸ்டி சாலையில் மழைநீர் வடிகால் பணிகள் ஆங்காங்கே நிலுவையில் உள்ளன. பொதுமக்கள் நலன் கருதி அந்த நிலுவை பணிகளையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் என்ன சொல்றாங்க?

ஆர்.முருகானந்தம், பொத்தேரி: நிழற்குடை இல்லாததால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டியுள்ளது. தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள். நிழற்குடை இருக்கும்போதும் பேருந்துகள் நிழற்குடை முன் நின்று செல்லும்.

ஆனால், நிழற்குடை இல்லாததால், பேருந்துகள் குறிப்பிட்ட இடத்தில் நிற்காமல் முன்பின் நின்று செல்கின்றன. இதுவும் பயணிகளுக்கு பெரிதும் இடையூராக உள்ளது. எனவே நிழற்குடைகள் அமைத்தால் பயணிகளுக்கு மிகவும் வசதியாக இருக்கும்.

எஸ்.குமரேசன், மறைமலைநகர்: மறைமலை நகர் பகுதியில் தாம்பரம் மார்க்கமாகவும், செங்கல்பட்டு மார்க்கமாகவும் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள். ஏற்கெனவே அங்கிருந்த நிழற்குடைகள் அகற்றப்பட்டதால் பயணிகள் வெயிலிலும் மழையிலும் சிரமப்படுகிறார்கள்.

பேருந்து எந்த இடத்தில் நிற்கும் என்று பயணிகளுக்கு தெரியவில்லை. அதேபோல், பேருந்தை எங்கு நிறுத்த வேண்டும் என்று பேருந்து ஓட்டுநர்களுக்கும் சரியாக தெரியவில்லை. எனவே, விரைவாக நிழற்குடைகள் அமைக்க வேண்டும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x