

குடி போதையில் பாலத்தின் மீது காரை மோதிய வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் ஜெய் இன்று (அக்.7) நீதிமன்றத்தில் சரணடைந்தார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் சரணடைந்தார்.
நடிகர் ஜெய் கடந்த மாதம் 21 ஆம் தேதி அதிகாலையில் குடிபோதையில் அடையாறு பாலத்தின் மீது காரை மோதினார். இதில் கார் மட்டும் சேதமடைந்தது. குடிபோதையில் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியது, வேகமாக காரை ஓட்டியது, ஆவணங்கள் இல்லாதது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸார் நடிகர் ஜெய்யை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக ஜெய், சைதாப்பேட்டை குற்றவியல் 4வது நடுவர் மன்றத்தின் முன் கடந்த 3-ம் தேதி ஆஜர் ஆனார். அவருக்கு அன்று குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்டது. மீண்டும் அக்டோபர் 5 அன்று ஆஜராக குற்றவியல் நடுவர் ஆப்ரகாம் லிங்கன் உத்தரவிட்டார். ஆனால் கடந்த 5-ம் தேதி வழக்கில் ஜெய் ஆஜராகவில்லை.
அதனால் ஜெய் மீது பிணையில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதோடு அக்.6 (வெள்ளிக்கிழமை) ஆஜராக உத்தரவிடப்பட்டது.
ஆனால், நடிகர் ஜெய் வீட்டுக்கு பிடிவாரண்ட்டை போலீஸார் கொடுக்கச் சென்றபோது அவர் தலைமறைவானது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸார் குற்றவியல் நடுவரிடம் தகவல் தெரிவித்ததை அடுத்து ஜெய்யை இரண்டு நாளில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி போலீஸாருக்கு நடுவர் ஆப்ரகாம் லிங்கன் உத்தரவிட்டார்.
இந்நிலையில், நடிகர் ஜெய் இன்று (அக்.7) நீதிமன்றத்தில் சரணடைந்தார்.