

கடலூர்: கடலூர் கேப்பர் மலையில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. உள்படம்: கேப்பர் மலையில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டு லாரியில் எடுத்துச் செல்லப்படுகிறது.கடலூர் கேப்பர் மலையின் இயற்கை வளங்களான செம்மண்
மற்றும் தண்ணீர் சமூக விரோதிகளால் சுரண்டப்பட்டு வருகிறது.கடலூர் கேப்பர் மலையின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் அழிவின் விளம்புக்கு சென்றுள்ளது அந்த அழகிய மலைப்பகுதி. இதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மலையை காப்பாற்ற வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
கடலூர் நகருக்கு மிகப்பெரிய இயற்கை அரணாக இருப்பது கேப்பர் மலை. இது கடலூர் மாநகரின் தென் மேற்கே திருவந்திபுரம் வரை பரந்து விரிந்துள்ளது. ‘கேப்பர்’ என்ற ஆங்கில அதிகாரி இப்பகுதியில் தங்கியிருந்ததால் இது ‘கேப்பர் மலை’ யானது.
வாழைத்தோப்புகள், முந்திரி தோப்புகள், பலா மரங்கள், பனை மரங்கள், மலர் தோட்டங்கள், கரும்பு வயல்கள், பசுமை நிறைந்த நெல் வயல்கள் நிறைந்து இருப்பது தான் இந்த மலையின் சிறப்பு. இப்பகுதி சமூகவெளி காடுகளில் உள்ள மரங்களில் தங்கியுள்ள பறவைகளின் கீச்கீச் சத்தம், இதன் இயற்கைச் சூழலை நமக்கு நன்கு உணர்த்தும்.
கடலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவையை தீர்ப்பதே இப்பகுதியில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் தான். இந்த மலையின் நிலத்தடி நீர் மிகவும் சுவையான நிலத்தடி நீராகும். இப்படி இயற்கையோடு இணைந்திருக்கும் கேப்பர் மலையில் உள்ள இயற்கை வளங்களான செம்மண் மற்றும் தண்ணீர் சமூக விரோதிகளால் சுரண்டப்பட்டு வருகிறது. இந்த மலைத் தண்ணீரைப் பயன்படுத்தி 5 தனியார் மினரல் வாட்டர் கம்பெனிகள் தங்களை வளப்படுத்தி கொள்கின்றன.
மேலும் சுவை மிகுந்த இங்குள்ளத் தண்ணீரை சிறுசிறு அளவில் திருடி விற்பனை செய்து வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க பகலென்றும் பாராது, இரவென்றும் அஞ்சாது லாரிகளில் வந்து இந்த மலையில் இருந்து செம்மண்ணை வெட்டி எடுத்துச் செல்கின்றனர். இதனால் கேப்பர் மலை கொஞ்சம் கொஞ்சமாக அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இப்படி செம்மண்ணை வெட்டி எடுப்பதால் மலையின் நீர் பிடிப்பு தன்மை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து விடும் நிலையில் உள்ளது.
“இதை கவனிக்கத் தவறினால் நாளடைவில் கடலூர் பகுதியில் குடிநீர் பஞ்சம் ஏற்படும். இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர்” சமூக ஆர்வலர்கள். “இந்த மலையில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதை தடுத்து நிறுத்தாவிட்டால் சுற்றுச்சூழல் சம நிலைக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதி இயற்கை வளங்களை காப்பாற்ற வேண்டும்” என்கின்றனர் கடலூரை சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவிகள்.
இது குறித்து கடலூர் அனைத்து குடியிருப்போர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் பொது செயலாளர் எம். மருதவாணன் கூறுகையில், “கேப்பர் மலையை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அரசு அறிவிக்க வேண்டும். இந்த மலையில் உள்ள இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இதன் பாதிப்பு கேப்பர் மலைக்கு மட்டுமின்றி அதையொட்டியுள்ள சமவெளிப்பகுதிக்கும் இருக்கும்” என்றார்.