

கம்பம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக் கானல், வட்டக்கானல் வனப்பகுதி அருகே அரிசிக்கொம்பன் என்ற காட்டுயானையின் நடமாட்டம் அதிகளவில் இருந்து வந்தது. வனப்பகுதியையொட்டிய கிராமப்புறங்களில் உள்ள ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசியை விருப்ப உணவாக உட்கொண்டதால் இந்த யானையை அரிசிக்கொம்பன் என அழைத்து வருகின்றனர்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததால் இந்த யானைக்கு கடந்த ஏப்.29-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி தமிழக எல்லையான முல்லைக்கொடி வனப் பகுதியில் கேரள வனத்துறையினர் விட்டனர்.
இதன் கழுத்தில் பொருத்திய சாட்டிலைட் ரேடியோ காலர் மூலம் தமிழக, கேரள வனத் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்நிலையில், இந்த யானை கடந்த 27-ம் தேதி வழித்தடம் தேடி கம்பம் நகருக்குள் புகுந்தது. பிரம்மாண்டமான உருவத்துடன், கம்பீரமான கொம்புகளுடன் தெருக்களில் ஓடிய இந்த யானையை பார்த்ததும் பலரும் மிரண்டு ஓடினர்.
யானையின் பாதுகாப்புக்காக கம்பம், சுருளிப்பட்டியில் மின் விநியோகம் நிறுத்தப் பட்டது. பொதுமக்களின் நலனுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரிசிக்கொம்பனை பிடிக்க 3 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. மயக்க ஊசி செலுத்துவதற்காக மருத்துவர் குழு தயார்படுத்தப்பட்டனர்.
வனத்துக்குள் சென்ற யானை: இருப்பினும் யாரையும் தொந்தரவு செய் யாத இந்த யானை, கம்பம் துணை மின் நிலையம் வழியாக புளியந்தோப்பில் தஞ்சம் புகுந்தது. மறுநாள் அதிகாலை மேகமலை வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது.
மீண்டும் நகருக்குள் இந்த யானை வரு வதைத் தடுக்க வனத் துறையினர் மேகமலை அடிவாரத்தில் பாதுகாப்பு வளையம் அமைத்து கண்காணித்து வருகின்றனர். யானை வனப்பகுதிக்குள் சென்றுவிட்ட நிலையில் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமலில் உள்ளன.
மேகமலைக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்குள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் இரவில் வீடுகளிலிருந்து வெளியே வரக்கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேகமலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுருளிப்பட்டி, காமயகவுண்டன்பட்டி, நாராயணத்தேவன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் திராட்சைத் தோட்டம் அதிகளவில் உள்ளன. அரிசிக்கொம்பன் யானை இங்கு வர வாய்ப்புள் ளதால் தொழிலாளர்கள் வேலைக்குச் செல்வ தற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியின் மலையடிவாரக் கிராமங்களில் ஊரடங்கு உத்தரவு இன்னமும் அமலில் உள்ளது. அரிசிக்கொம்பனால் தேனி மாவட்டத்தின் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொந்தரவு செய்யவில்லை: இந்த யானையின் வருகை குறித்து கம்பம் நகரைச் சேர்ந்த மக்கள் சிலர் கூறியதாவது: இந்த யானை கம்பம் நகரில் உலா வந்த நாட்களில் ஊரடங்கு, வேலைக்குச் செல்ல தடை, வனத் துறையினரின் கட்டுப்பாடு, சுற்றுலா பகுதிகளுக்குச் செல்ல தடை போன்ற வற்றால் பதற்றத்தில் இருந்தோம். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குறுகலான தெருக்களில் யானை மிரண்டு ஓடியபோது, கடும் சேதத்தை விளைவித்து விடுமோ என்ற அச்சத்தில் இருந்தோம். தொட்டுவிடும் தூரத்தில் மக்கள் இருந் தாலும், யாரையும் இந்த யானை தொந்தரவு செய்யவில்லை.
வழித்தடத்தை தேடி: தனது வழித்தடத்தை தேடி அங்கும் இங்கும் அலைந்து திரிந்துவிட்டு ஒருவழியாக வனப் பகுதிக்குள் சென்றுவிட்டது. இந்த யானை மீண்டும் வழித்தடம் தவறி நகருக்குள் வந்து விடாமல் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.