தாமிரபரணியில் கலக்கும் கழிவுநீர்; நெல்லையில் சவாலாக மாறிய தடுப்பு பணி: ரூ. 295 கோடியில் உருவாகும் திட்டம்

தாமிரபரணியில் கலக்கும் கழிவுநீர்; நெல்லையில் சவாலாக மாறிய தடுப்பு பணி: ரூ. 295 கோடியில் உருவாகும் திட்டம்
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் பாதாள சாக்கடை திட்டத்தை சரிவர செயல்படுத்தவில்லை என்பதால் தாமிரபரணியில் கழிவுநீர் பெருமளவுக்கு கலந்து வருகிறது. இது தொடர்பாக சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் பிரச்சினையை கிளப்பியிருந்தனர். ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியிருந்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் கலக்கும் பகுதிகளான மீனாட்சிபுரம், கைலாசபுரம், உடையார்பட்டி போன்ற இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். கழிவுநீர் உந்து நிலையத்திலும் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் கலப்பது தொடர்பாக நீண்டகாலமாக புகார்கள் உள்ளன. இதை தடுக்க மாநகராட்சி சார்பில் ரூ. 295 கோடி மதிப்பில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். இதில் 90 சதவீத பணிகள் முடிவு பெற்றுள்ளன. சில வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாததால், அவர்கள் மழைநீர் வடிகால் மூலம் கழிவுநீரை நேரடியாக ஆற்றில் விடுகின்றனர்.

அதை தடுப்பது சவாலாக இருக்கிறது. அதுகுறித்து சர்வே செய்து வருகிறோம். விரைவில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க இருக்கிறோம். மேலும் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை தடுக்க ராட்சத சம்ப் அமைத்து கழிவுநீரை சேகரிக்க திட்டமிட்டுள்ளோம்.

மீனாட்சிபுரம், கைலாசபுரம், உடையார்பட்டி, சிந்துபூந்துறை ஆகிய 4 இடங்களில் அதிக அளவு கழிவுநீர் கலக்கிறது. இதுதவிர 16 இடங்களில் சின்ன சின்ன குழாய்கள் வழியாக கழிவுநீர் கலக்கிறது. அதிக கழிவு நீர் கலக்கும் நான்கு இடங்களில் ராட்சத சம்ப் அமைத்து, அதில் கழிவுநீரை சேகரித்து பின்னர் அங்கிருந்து பம்பு மூலம் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

2 மாதங்களில் இந்த பணிகள் முடிவடையும். இதுபோல் பாளையங்கால்வாய் உள்ளிட்ட கால்வாய்களிலும் மக்கள் குழாய் மூலம் நேரடியாக கழிவுநீரை விடுகின்றனர். இந்த குழாய்களை துண்டிக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் துண்டிக்கா விட்டால் விரைவில் மாநகராட்சி சார்பில் அந்த குழாய்கள் துண்டிக்கப்படும் என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in