

தென்காசி: சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளான குருக்கள்பட்டி, நவநீதகிருஷ்ணாபுரம், ஜமீன் இலந்தைகுளம், பாம்புகோவில்சந்தை, ராயகிரி, சங்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி சாகுபடி அதிகம் நடைபெறுகிறது. பருத்தியை அறுவடை செய்யும் விவசாயிகள் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு கொண்டுவந்து விற்பனை செய்கின்றனர். சங்கரன்கோவில் பகுதியில் சுமார் 20 கமிஷன் கடைகள் உள்ளன. இங்கிருந்து திண்டுக்கல், திருச்சி, சேலம் பகுதிகளைச் சேர்ந்த பருத்தி அரவை ஆலைகளில் இருந்து ஆட்கள் வந்து பருத்தியை கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு ஒரு கிலோ பருத்தி அதிகபட்சம் 120 ரூபாய் வரை விற்பனையானது. இதனால் ஏராளமான விவசாயிகள் இந்த ஆண்டு ஆர்வத்துடன் பருத்தி சாகுபடி செய்தனர். ஆனால் திடீர் மழை, அதிகமான வெயில் உள்ளிட்ட இயற்கை இடர்பாடுகள் காரணமாக பருத்தி செடிகள் செழித்து வளரவில்லை. மகசூல் குறைந்துள்ளது. விலையும் வீழ்ச்சியடைந்து கிலோ ரூ. 50 முதல் 55 வரை மட்டுமே விற்பனையாகிறது.
விலை நிர்ணயம் தேவை: இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது, “கடந்த ஆண்டு பருத்தி அதிகபட்சமாக 120 ரூபாய் வரை விற்பனையானதால் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைந்தது. இந்த ஆண்டு விதைப்பு பருவத்தில் பெய்த பலத்த மழையால் முளைப்பு பாதிக்கப்பட்டது. பருத்தி விளைச்சலும் குறைந்துள்ளது. தற்போது பருத்திக்கு உள்ள விலை உற்பத்தி செலவுக்கு கூட கட்டுபடியாகாது. ஒரு கிலோ 70 ரூபாய்க்கு மேல் விற்பனையானால்தான் லாபம் கிடைக்கும்.
விவசாயிகள் உற்பத்தி செய்யும் அனைத்து விளைபொருட்களுக்கும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போது தான் விவசாயத்தை பாதுகாக்க முடியும்” என்றனர்.
பருத்தி தேக்கம்: இதுகுறித்து சங்கரன்கோவில் வியாபாரி ஜெயமுருகன் கூறும்போது, “கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் தினமும் சராசரியாக சங்கரன்கோவில் பகுதியில் உள்ள கமிஷன் கடைகளுக்கு 100 டன் வரை பருத்தி வந்தது.
ஆனால் இந்த ஆண்டு 30 முதல் 35 டன் அளவுக்கே பருத்தி வருகிறது. வரத்து குறைந்தால் விலை அதிகரிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு வரத்து குறைவாக இருந்தாலும் விலை அதிகரிக்கவில்லை. கடந்த ஆண்டின் விலையை விட பாதியாக குறைந்துள்ளது. ஒரு கிலோ 50 முதல் 55 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
கடந்த ஆண்டு பருத்தி அரவை ஆலைகளில் இருந்து வியாபாரிகள் வாங்கிய பருத்தி அதிகமாக இருப்பு உள்ளதால் தேக்கம் அடைந்துள்ளது. எனவே இந்த ஆண்டு அதிகமான வியாபாரிகள் பருத்தி கொள்முதல் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை. விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.