Published : 03 Oct 2017 02:09 PM
Last Updated : 03 Oct 2017 02:09 PM

ஊத்தங்கரை அருகே சாலைப் பள்ளங்களை சீர்செய்ய களம் இறங்கிய இளைஞர்கள்

ஊத்தங்கரை அருகே குண்டும், குழியுமான சாலையை கிராம இளைஞர்கள் ஒன்றிணைந்து சீர் செய்தனர்.

ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டி கிராமத்தில் திருப்பத்தூர் - சேலம் செல்லும் பிரதான சாலை உள்ளது. இச்சாலை வழியாக நாள்தோறும் பேருந்துகள், லாரி, இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்லும். இதனால், இச்சாலையில் போக்குவரத்து பரபரப்பு இருக்கும்.

இந்நிலையில், உப்பாரப்பட்டி, கெங்கபிராம்பட்டி, ஊத்தங்கரை வரை செல்லும் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக மாறியது. இதனால், இச்சாலையில் பயணம் செய்வதும், கடந்து செல்வதும் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சவாலாக அமைந்தது. மேலும், அடிக்கடி விபத்துகளும் நடந்து வந்தது. தற்போது பெய்த மழையால் பள்ளமான சாலையில் மழைநீர் தேங்கியது.

மழை காலங்களில் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்கள் விபத்துகளில் சிக்கும் அவல நிலை நீடித்தது. இச்சாலையை சீரமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.இதனை தொடர்ந்து செங்கன்கொட்டவூரைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒன்றிணைந்து நேற்று மினி வேனில் மண்ணை எடுத்துச் சென்று பள்ளமான பகுதிகளில் கொட்டி சீர் செய்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறும்போது, “தற்போது நாங்கள் தற்காலிகமாக தான் சாலையை மண் கொண்டு சீரமைத்து உள்ளோம். மழை தொடர்ந்து பெய்தால் பள்ளத்தில் கொட்டப்பட்ட மண் இருக்காது. எனவே, இச்சாலையை உடனடியாக சீரமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x