Published : 05 Oct 2017 04:49 PM
Last Updated : 05 Oct 2017 04:49 PM

கோவை அரசு அச்சகத்தை உத்தரப் பிரதேசத்துக்கு மாற்றுவதா?- அக்.10 கண்டன ஆர்ப்பாட்டம்: வீரமணி

கோவை அரசு அச்சகத்தை உத்தரப்பிரதேசத்துக்கு மாற்றுவதற்குக் கண்டனம் தெரிவித்து அக்டோபர் 10-ம் தேதி கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வியாழக்கிழமை அவர் விடுத்துள்ள அறிக்கையில், ''கோவையில் உள்ள மத்திய அரசு அச்சகத்தை மூடி விட்டு, அதனுடைய மூலப் பொருள்களையெல்லாம் லக்னோவுக்கு (உத்தரப்பிரதேசத்திற்கு) கொண்டு போவதற்கான முயற்சிகள் செய்யப்படுகின்றன என்ற செய்தி வேதனைக்கும், கண்டனத்திற்கும் உரியது!

தமிழ்நாடு அரசு இதற்கு ஒரு போதும் இசைவு தெரிவிக்கக் கூடாது. மேலும் உடனடியாக இத்தகு முயற்சியை எதிர்த்து டெல்லிக்கு எழுதித் தடுத்து நிறுத்திட ஆவன செய்ய வேண்டும். இதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுணக்கமின்றி உடனடியாக எடுக்க முன்வர வேண்டும்.தொடர்ந்து கொள்ளை போவதா?

தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருந்த நீலகிரி ஹிந்துஸ்தான் போட்டோ புகைப்படச் சுருள் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் பட்டை நாமம் போடப்பட்டு மூடப்பட்டு விட்டது. அதைத் தொடர்ந்து இப்போது இந்த செய்தி வெளியாகி உள்ளது.

நெய்வேலி, சீர்காழியின் அனல் மின் திட்டமும், வடக்கே கொண்டு போகும் செய்திகள் வருகின்றன. இப்படியே தொடர்ந்தால் தமிழ்நாட்டின் வளம், வேலை வாய்ப்புகள் என்னாவது? வடக்கின் சுரண்டல் பூமியா தமிழ்நாடு? இதனைக் கண்டித்து கோவை மண்டல கழகப் பொறுப்பாளர்கள், மண்டல தலைவர் உ. கருணாகரன் தலைமையிலும், மண்டல செயலாளர் சந்திரசேகரன், கோவை மாநகர தலைவர் உக்கடம் மோகன் ஆகியோர் முன்னிலையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் 10.10.2017 செவ்வாய் காலை 10.30 மணிக்கு கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகில் நடைபெறும்.

தோழர்கள் பெருந்திரளாகக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று தமிழ்நாட்டின் உரிமைக் குரலை உயர்த்திப் பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x