

திருப்பத்தூர்: திருப்பத்தூர் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட பிறகு பல்வேறு இடங்களில் சாலை அமைக்கும் பணிகள், சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. வாணியம்பாடி-செட்டியப்பனூர் கூட்டுச்சாலையில் இருந்து ஊத்தங்கரை வரை சாலை விரிவாக்க பணிகள் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளன. அதேபோல, திருப்பத்தூரில் இருந்து தருமபுரி வரை செல்லும் பிரதான சாலையில் 3 இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இப்பணிக்காக அங்கு மாற்றுப்பாதை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றுப்பாதையில் ஜல்லி கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சிறுபாலம் அமைக்கும் பணியை விரைவுப்படுத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, ‘‘திருப்பத்தூர் - தருமபுரி பிரதான சாலையில் 3 இடங்களில் சிறுபாலம் அமைக்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெறுகின்றன. சிறுபாலம் அமைக்கும் பணிகளுக்காக அங்கு மாற்றுப்பாதை வசதிஏற்படுத்தப்பட்டது. இந்த மாற்றுப்பாதையில் ஜல்லி கற்கள் கொட்டி அதை அப்படியே விட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருப்பத்தூர் - தருமபுரி பிரதான சாலையில் தினசரி நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இரு சக்கர வாகனங்கள் அடிக்கடி பழுதாகிறது. குண்டும், குழியுமான சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். ஒரு சில இடங்களில் மரண பள்ளங்கள் இருப்பதால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ் வழியாக ஆட்டோ ஓட்டுநர்கள் வரவே அஞ்சுகின்றனர்.
பேருந்துகள், லாரிகள், கனரக வாகனங்கள் மாற்றுப்பாதையில் சென்று வர சிரமமாக உள்ளது. சிறுபாலம் அமைக்கும் பணிகள் விரைவாக செய்து முடித்து அந்த சாலையை மக்கள் பயன்பாட்டுக்கு நெடுஞ்சாலைத்துறையினர் கொண்டு வர வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் பிரதான கோரிக்கையாக உள்ளது’’ என்றனர்.
இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘சிறுபாலம் அமைக்கும் பணிகளை வேகமாக முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாற்றுப்பாதையில் தார்ச்சாலை அமைக்க முடியாது என்பதால் விரைவாக சிறுபாலம் அமைக்கும் பணிகள் முடிக்கப்படும்’’ என்றனர்