ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு  

ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு  
Updated on
1 min read

ராமநாதபுரம்: ஏர்வாடியில் பிரசித்திபெற்ற பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகீம் ஷாகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடைபெற்று வருகிறது. இந்தாண்டு 849-வது சந்தனக்கூடு திருவிழா மே 21-ம் தேதி மவுலீது (புகழ்மாலை) ஓதப்பட்டு விழா தொடங்கியது. அதனையடுத்து இன்று மாலை கொடியேற்றம் நடைபெற்றது.

முன்னதாக தர்ஹா மண்டபத்திற்கு எதிரே கொடிமரம் மேடையில் அடிமரம் ஏற்றப்பட்டது. பின்னர் ஏர்வாடி குடியிருப்பில் உள்ள முஜாபிர் நல்ல இபுராகிம் லெவ்வை மஹாலில் இருந்து மாலை கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக தர்ஹாவை வந்தடைந்தது. அலங்கார ரதம் தர்ஹாவில் 3 முறை வலம் வந்த பின்னர் சிறப்பு பிரார்த்தனைக்கு பின், பக்தர்களின் நாரே தக்பீர் முழக்கத்துடன் கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் உள்ளிட்ட அனைத்து மதங்களையும் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி, கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், ஏர்வாடி தர்ஹா ஹத்தார் நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

முக்கிய நிகழ்ச்சிான உரூஸ் என்னும் சந்தனக்கூடு திருவிழா ஜூன் 12-ம் தேதி மாலை தொடங்கி, ஜூன் 13-ம் தேதி அதிகாலை பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். ஜூன் 19-ம் தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடையும். விழாவுக்கான ஏற்பாடுகளை தர்ஹா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in