

திருநெல்வேலி: திருநெல்வேலி டவுனை சேர்ந்தவர் இஷாந்த்(40). நகைக் கடை மற்றும் ஷாப்பிங் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரும், 2 உதவியாளர்களும் திருநெல்வேலியிலிருந்து காரில் கேரள மாநிலம் நெய்யாற்றின் கரைக்கு நகைகள் வாங்க நேற்று சென்று கொண்டிருந்தனர்.
திருநெல்வேலி அருகே மூன்றடைப்பு ரயில்வே மேம்பாலத்தில் இவரது காருக்குப் பின்னால் 2 கார்களில் வந்த முகமூடி திருடர்கள் வழிமறித்தனர். காரை நிறுத்திவிட்டு கீழே இறங்கிய இஷாந்த் மீது முகமூடி திருடர்கள் மிளகாய் பொடியைத் தூவி, அவரைக் கம்பியால் தாக்கியுள்ளனர். அவர் கூச்சலிட்டார்.
இதை பயன்படுத்தி காரின் கண்ணாடியை உடைத்து அதனுள் இருந்த ரூ.1.5 கோடி ரொக்கத்தை அவர்கள் கொள்ளையடிக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த தனியார் ஆம்னி பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் பயணிகள் பேருந்தை நிறுத்தினர். இதனால் சுதாரித்துக்கொண்ட அந்த கும்பல் இஷாந்தை தங்களது காரில் பலவந்தமாக ஏற்றியதுடன், அவரது காரையும் கடத்திச் சென்றுள்ளனர். சிறிது தூரம் சென்றதும், இஷாந்தை நடுவழியில் இறக்கிவிட்ட அந்த கும்பல் நாங்குநேரி சுங்கச்சாவடி முன்புள்ள தேசிய நெடுஞ்சாலை விலக்கில் திரும்பி, நெடுங்குளம் கிராமத்தை நோக்கி சென்றுள்ளனர். அங்குள்ள குளத்தின் கரையோரம் இஷாந்தின் காரை நிறுத்தி அதில் இருந்த பணக் கட்டுகளை தங்கள் காருக்கு மாற்றிக் கொண்டு தப்பினர்.
இதுகுறித்த தகவலின்பேரில் நாங்குநேரி மற்றும் மூன்றடைப்பு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து இஷாந்திடம் விசாரணை நடத்தினர். 24 மணிநேரமும் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படும் தேசிய நெடுஞ்சாலையில் முகமூடி கும்பல் பட்டப்பகலில் காரை வழிமறித்து துணிகர வழிப்பறியில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.