Published : 31 May 2023 06:09 AM
Last Updated : 31 May 2023 06:09 AM
திருப்பூர்: திருப்பூர் மாநகர் முழுவதும் சுமார் 14,000 தெரு விளக்குகள் புதிதாக பொருத்தப்பட உள்ளதாக, மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் மேயர் ந.தினேஷ்குமார் தெரிவித்தார்.
திருப்பூர் மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் ந.தினேஷ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. மாநகராட்சி ஆணையர் பவண்குமார் ஜி.கிரியப்பனவர், துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள், மண்டல தலைவர்கள் பேசினர்.
இல.பத்மநாபன்: ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் கட்டப்பட்ட பேருந்து நிலையத்துக்கு முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி பேருந்து நிலையம் என பெயர் வைத்துள்ளோம். ஆனால் பேருந்துகளின் பெயர்ப் பலகைகளில் பழைய பேருந்து நிலையம் என்றே உள்ளது. போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மூலம் இதனை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டலத் தலைவர் வழங்கும் நிதி போதுமானதாக இல்லை. ஒரு வார்டுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும். 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் 11,459 வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
தனலட்சுமி: 1-வது வார்டு பூலுவப்பட்டி சுற்றுச்சாலையில் குடிநீர் குழாய் உடைந்து 6 நாட்களாக தண்ணீர் வீணாகி வருகிறது. அதேபோல் ஆர்விஆர் கார்டன், தந்தை பெரியார் காலனி பகுதிகளில் சாக்கடை நீர் வெளியே வருகிறது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்பகம் திருப்பதி: மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரள மாநிலம் அட்டப்பாடி வழியாக பவானி ஆறாக பில்லூர் அணைக்கு வருகிறது. பவானிக்கு செல்லும் சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு 3 தடுப்பணைகளை கட்டி வருகிறது. இந்த நடவடிக்கையால் எதிர்காலத்தில் திருப்பூருக்கு வரக்கூடிய தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும். சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு கட்டிவரும் தடுப்பணையை உடனடியாக தடுத்து நிறுத்த மாநகராட்சி மாமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டுவர வேண்டும்.
மேயர் ந.தினேஷ்குமார் பேசியதாவது: திருப்பூர் மாநகரில் பல ஆண்டுகாலமாக இருந்து வந்த தெருவிளக்கு பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக, 3 மற்றும் 4-வது மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் 4,755 தெரு விளக்குகளுக்கும், 1 மற்றும் 2-வது மண்டலம் உட்பட்ட பகுதிகளில் 4,238 தெரு விளக்குகளுக்கும் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மின் சிக்கனத்தை கடைபிடிக்கும் வகையில் சோடியம் விளக்குகளுக்கு பதிலாக எல்இடி விளக்குகள் பொருத்தும் பணிக்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் அனைத்தும் இன்று (மே 31) தொடங்க உள்ளன. மாநகர் முழுவதும் சுமார் 14,000 தெரு விளக்குகள் புதிதாக பொருத்தப்பட உள்ளன. குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் வகையில் 4-வது கூட்டுக் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் எடுக்கப்பட்ட பிரத்யேக ஆய்வில் 352 கிலோ மீட்டர் தூரத்துக்கு வீடுகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகளுக்கு குழாய்கள் பதிப்பது, குடிநீர் இணைப்பு வழங்குவது விடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
இதற்காக ரூ.56 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ஜூன் இறுதிக்கு முன்பாக இந்தப் பணிகள் தொடங்கும். மாநகர் முழுவதும் பழுதடைந்த சாலைகள் ரூ.99 கோடியே 80 லட்சம் மதிப்பில் சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளன, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT