

சென்னை: சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தமிழ்நாடு முத்தரையர் சங்க மாநிலஅலுவலக கட்டிடத்தை அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள புது பங்களா தெருவில் தமிழ்நாடு முத்தரையர் சங்கமாநில அலுவலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திறப்பு விழாவுக்கு சங்கத்தின் மாநில தலைவர் பெ.அம்பலத்தரசு என்ற ராமலிங்கம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் கா.குப்புசாமி வரவேற்றார். மாநில பொருளாளர் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.
விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: எனது சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் முத்தரையர் சங்க மாநில அலுவலகம் திறக்கப்பட்டிருப்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சிஅளிக்கிறது. பல விமர்சனங்களுக்குஇடையே மதுரையில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் சிலையைநான் திறந்து வைத்தேன்.
திமுக ஓர் அரசியல் இயக்கம் அல்ல. அது ஒரு சமூகநீதி இயக்கம். தமிழகத்தில் உள்ள ஒவ்வொருபிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடி மக்களுக்கு ஆதரவாக இருக்கும் ஓர் இயக்கம். அந்த வகையில், திமுகவுக்கும், முத்தரையர் சங்கத்துக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது.
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முத்தரையர் சமூக முன்னேற்றத்துக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார். குறிப்பாக, கல்வி, வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் முத்தரையர் சமூகத்தை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கினார். அத்துடன், கட்சியிலும் இந்த சமூகத்தை சேர்ந்த பலருக்கு முக்கிய பொறுப்புகளை வழங்கினார்.
முத்தரையர் சமூகம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, படிப்படியாக நிறைவேற்றி தருவேன். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய அலுவலகத்தின் கல்வெட்டை திறந்து வைத்து பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ‘‘தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்கி, சென்னையில் வேலை தேடுவதற்கும், அதேபோல, தகுதித் தேர்வு, நேர்காணல் போன்றவற்றில் பங்கேற்க வருபவர்கள் எவ்வித செலவும் இன்றி தங்கிக் கொள்ளவும் இந்த கட்டிடம் உதவும்’’ என்றார்.
இந்த விழாவில், முசிறி தொகுதி எம்எல்ஏவும், திருச்சி வடக்கு மாவட்டச் செயலாளருமான காடுவெட்டி என்.தியாகராஜன், எம்எல்ஏக்கள் குளித்தலை ஆர்.மாணிக்கம், ஸ்ரீரங்கம் எம்.பழனியாண்டி, மேலூர் பி.பெரியபுள்ளான் என்ற செல்வம் மற்றும் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.