

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களை பழுதுநீக்கி பராமரிக்கத் தேவையான நிதிஒதுக்கப்பட்டுள்ளது என்று நேற்று நடைபெற்ற சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் மேயர் பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சிக் கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில், மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கேள்வி நேரம்முடிந்ததும், நேரமில்லா நேரத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு: மாநகராட்சி 92-வது வார்டு உறுப்பினர் கே.வி.திலகர்: மாநகராட்சி சுடுகாட்டில் இறுதிச் சடங்குக்கு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள்.
மேயர் பிரியா: மாநகராட்சி சுடுகாடு, இடுகாட்டில் இறுதிச் சடங்கு செய்வதற்குப் பணம் எதுவும் வசூலிக்கப்படவில்லை. பணம் வாங்குவதாகப் புகார் வந்ததால், இறுதிச் சடங்குக்கு இலவசம் என்று அறிவிப்புப் பலகை வைக்கச் சொல்லியுள்ளோம். இதில், ஆன்-லைன் முறையைக் கொண்டு வரவும் திட்டமிட்டுள்ளோம். இறுதிச் சடங்கு இலவசம் என்பதை மன்ற உறுப்பினர்களும் மக்களிடத்தில் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
நிலைக்குழு தலைவர் தனசேகரன்: நீதிமன்றத்தில் உள்ள வழக்கைக் காரணம் காட்டி திரையரங்குகள், திருமண மண்டபங்களை நடத்துபவர்கள் லட்சக்கணக்கில் வரிப் பாக்கி வைத்திருக்கிறார்கள். தனியார் தொலைத் தொடர்பு கோபுர நிறுவனங்கள் சுமார் ரூ.100 கோடி வரை வரி செலுத்தாமல் உள்ளன. இது தொடர்பான வழக்குகளை விரைவுபடுத்த வேண்டும்.
182-வது வார்டு உறுப்பினர் கே.பி.கே.சதீஷ்குமார்: அம்மா உணவகம் மிகவும் பழுதடைந்துள்ளது. துணை மேயர் மகேஷ்குமார்: மாநகராட்சி பகுதியில் பழுதடைந்துள்ள அம்மா உணவகங்களை பழுதுநீக்கவும், அறிவிப்புப் பலகை வைக்கவும், உபகரணங்கள் வாங்கவும் ரூ.4.50 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேயர் பிரியா: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் அம்மா உணவகங்களை பழுது நீக்கி பராமரிக்கத் தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
14-வது வார்டு குழுத் தலைவர் எஸ்.வி.ரவிச்சந்திரன்: பெருங்குடி ஏரி அதிமுக ஆட்சிக் காலத்தில் பராமரிக்கப்படவில்லை. கல்லுக்குட்டை பகுதியில் உள்ள 13 ஆயிரம்குடியிருப்புகளுக்கு எதுவும் செய்யவில்லை. அங்கு தேவையானவற்றை திமுக ஆட்சியில்தான் செய்தோம்.
134-வது வார்டு உறுப்பினர் உமா ஆனந்த்: சென்னை ஸ்மார்ட் சிட்டி நிறுவன செயல்பாடுகளை மன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்க வேண்டும். கோடிக்கணக்கில் நூலக வரி உள்ளது. இருக்கும் நூலகங்களை மேம்படுத்தவும், புதிய நூலகங்களைத் திறக்கவும் அதைப் பயன்படுத்துவது குறித்து குழு அமைத்து நூலகத் துறையுடன் இணைந்து செயல்படுத்த வேண்டும்.
மாநகராட்சி ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன்: உறுப்பினர்கள் சிலர்துப்புரவுப் பணியாளர்கள் பற்றாக்குறை பற்றிப் பேசினார்கள். 10 மண்டலங்களில் அவுட்சோர்சிங் மூலம்தூய்மைப் பணி மேற்கொள்ளப்படுகிறது.
மாநகராட்சியில் பணிபுரியும் 500 துப்புரவுப் பணியாளர்கள் ஓய்வுபெறவுள்ளனர். அந்த இடத்துக்கு மாற்றுப் பணியாளர்களை நியமிப்பது குறித்து விரைவில் முடிவெடுத்து பற்றாக்குறை பிரச்சினைக்குத் தீர்வு காணப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மொத்தம் 61 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.