Published : 31 May 2023 06:44 AM
Last Updated : 31 May 2023 06:44 AM
சென்னை: `கரூர் குரூப்' என்ற பெயரில் டாஸ்மாக் ஊழியர்களிடம் அராஜகமாகப் பணம் வசூல் செய்வோரைத் தடுக்கக் கோரி, சென்னை மாவட்ட டாஸ்மாக் மேலாளருக்கு சிஐடியு, ஏஐடியுசி, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் கடிதம் அனுப்பியுள்ளன.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மத்திய மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக `கரூர் குரூப்' என சொல்லிக் கொண்டு மனோகர், சம்பத் மற்றும் ஷியாம் ஆகியோர் நேரில் வந்தும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் ரூ.50 ஆயிரம், ரூ.45 ஆயிரம் எனக் கடைகளின் விற்பனைக்கு ஏற்றார்போல் பணம் தர வற்புறுத்துகின்றனர். மாவட்ட மேலாளர் கூறியதாலேயே கடைகளில் வசூலிப்பதாகவும் கூறுகின்றனர்.
இவர்கள் யார், எதற்கு கடையிலிருந்து பணம் கொடுக்க வேண்டும் எனக் கேட்டால் பணம்கொடுக்காத கடைப் பணியாளர்களை சோதனையில் சிக்க வைத்து பணிநீக்கம் செய்ய வைப்போம் என மிரட்டுகின்றனர். இவ்வாறு அதிகாரிகளைக் காட்டி, மிரட்டி வசூலில் ஈடுபடும் கரூர் குரூப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளன பொதுச் செயலாளர் திருச்செல்வன் கூறியதாவது: கள்ளச்சாராயத்தால் ஏற்கெனவே அரசுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. தற்போது, கரூர் குரூப் தொடர்ந்து அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறது. இதில் தனக்குத் தொடர்பில்லை எனஅமைச்சர் கூறுகிறார். அப்படியானால் இந்தளவுக்குச் செயல்பட அந்த நபர்களுக்கு யார் துணிச்சல் தருகிறார்கள். இதற்கு சிலதொழிற்சங்கங்களும் உடந்தையாக இருக்கின்றன.
இது போதாது என மாவட்ட மேலாளர்கள் நடத்தும் கூட்டத்திலும் கரூர் குரூப்பைச் சேர்ந்தவர்கள் பங்கேற்கின்றனர். அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என சில மாவட்ட மேலாளர்களே கூறுகின்றனர். இதையெல்லாம் கண்காணிக்க வேண்டிய ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய டாஸ்மாக் இயக்குநர் குழுவும் கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. இவற்றைக் கண்டித்து வரும் 20-ம் தேதி மண்டல அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT