Published : 31 May 2023 06:10 AM
Last Updated : 31 May 2023 06:10 AM
சென்னை: சென்னை, தியாகராய நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் கோயில் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தமிழகம், புதுச்சேரி உள்ளூர் ஆலோசனைக் குழு தலைவர் சேகர் ரெட்டி தெரிவித்தார்.
தியாகராய நகர் கோயில் வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், கோயில் கட்டுமானப் பணிக்கு ரூ.1 கோடி நன்கொடைக்கான காசோலையை நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.சி.சண்முகத்திடம் இருந்து சேகர் ரெட்டி பெற்றுக் கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியாதாவது: தியாகராய நகர் வெங்கட்நாராயணா சாலையில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோயிலை புதுப்பித்து பெரிய கோயிலாக கட்ட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்தது.
இடப்பற்றாக்குறையால் இத்திட்டம் தள்ளிபோனது. தற்போது கோயில் அருகே ரூ.14 கோடி மதிப்பில் 3 கிரவுண்ட் இடம் வாங்கியுள்ளோம். இந்த இடத்துக்கு பின்புறம் ஒரு வயதான தம்பதி தங்களது நிலத்தையும் தருவதாக கூறியுள்ளனர். மேலும் நிலம் வாங்கவும் தயாராக இருக்கிறோம்.
நிலம் வாங்க நன்கொடை: நிலம் வாங்குவதற்காக நன்கொடை கேட்டிருக்கிறோம். அதன்படி, என் சார்பில் ரூ.1 கோடி, நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஏ.சி.சண்முகம் (டாக்டர் எம்ஜிஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்), கோபால் னிவாசன் (டிவிஎஸ் குழுமம்), கே.எஸ்.ஜெயராமன் (ஆட்டோடெக் குழுமம்), சமீரா பவுண்டேஷன், அனுக்ரஹா ரியல் வேல்யூ, அக்ஸெஸ் ஹெல்த்கேர் ஆகியோர் சார்பில் தலா ரூ.1 கோடி, ஐசரி கே.கணேஷ் (வேல்ஸ்கல்விக் குழுமம்) சார்பில் ரூ.50லட்சம், டாக்டர் பழனிமுத்துகுமரன் ரூ.10 லட்சம் என இதுவரை ரூ.7.60 கோடி நன்கொடை பெறப்பட்டுள்ளது.
மேலும் சிலர் நன்கொடை தருவதாக தெரிவித்துள்ளனர். அவர்களிடமும் தேவஸ்தானம் பெயரிலேயே நன்கொடை வசூலிக்கப்படும். இவ்வாறு நிதியைப் பெற்று விரைவில் திருப்பணியைத் தொடங்க உள்ளோம். இது தொடர்பாக ஜூன் மாத இறுதியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து, ஆவணங்களை தேவஸ்தானத்திடம் சமர்ப்பிக்கிறோம். நன்கொடை அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொதுமக்களும் கோயிலை அணுகி தாராளமாக நன்கொடை தரலாம்.
6 மாதங்களில் பூமி பூஜை: தற்போது வாங்கப்பட்ட இடத்தில் கற்களாலான கோயிலை கட்ட உள்ளோம். நில மதிப்பை சேர்க்காமல் கோயில் கட்டுவதற்கு மட்டும் ரூ.40 முதல் ரூ.50 கோடி செலவாகும். இதற்கான செலவை தேவஸ்தானம் ஏற்கிறது. 6 மாதங்களில் பூமி பூஜை நடத்த திட்டமிட்டுள்ளோம். கோயில் கட்டிமுடிக்க குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஆகும்.
ஏழைகளுக்கு திருமணம், அன்னதானம் உள்ளிட்ட அனைத்தும் செய்வதற்கு புதிய கோயில் ஏற்ற இடமாக இருக்கும். திருப்பணி நடைபெறும்போது பாலாலயம் செய்து விடுவோம். பக்தர்களுக்கான வாகன நிறுத்தும் வசதி போன்றவற்றை செய்வதற்கு மாநகராட்சி நிலம் ஏதும் வழங்கினால், அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம்.
தரிசனத்துக்கு வருவோருக்கு டோக்கன் வழங்குகிறோம். அதன் மூலம் அவர்கள் அன்னதானத்தில் பங்கேற்கலாம். மாற்றுத் திறனாளிகள், முதியோர் தரிசனம் செய்யும் வகையில் கோயில் அமைப்பு இருக்கும். கீழ் தளத்தில் திருமண மண்டபம், முதல் தளத்தில் கோயில் அமைகிறது.
5 லட்சம் பேர் தரிசனம்: புதிதாக கட்டப்பட்ட தாயார் சந்நிதியை இதுவரை சுமார் 5 லட்சம் பேர் தரிசனம் செய்திருப்பர். வரும் 7-ம் தேதி மும்பையில் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடக்கிறது. இதில் மகாராஷ்டிரா முதல்வர், துணை முதல்வர் பங்கேற்கின்றனர்.
இதேபோல் 8-ம் தேதி ஜம்மு காட்ராவில் கட்டப்பட்டுள்ள கோயிலில் கும்பாபிஷேகம் நடக்கிறது. வரும் 10-ம் தேதி உளுந்தூர்பேட்டையில் கட்டப்பட்டு வரும் கோயிலில் ராஜகோபுரம் போன்றவற்றுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும். இதைத் தொடர்ந்து ஓராண்டில் கும்பாபிஷேகம் நடைபெறும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT