தொழிலாளர்களின் பணத்தில் போக்குவரத்து துறை இயக்கம்: அண்ணா தொழிற்சங்கம் குற்றச்சாட்டு

தொழிலாளர்களின் பணத்தில் போக்குவரத்து துறை இயக்கம்: அண்ணா தொழிற்சங்கம் குற்றச்சாட்டு
Updated on
1 min read

சென்னை: தொழிலாளர்களின் பணத்தை வைத்து போக்குவரத்துத் துறை நடத்தப்படுவதாக அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை, தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறைச் செயலரை சந்தித்து துறை சார்ந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநகர போக்குவரத்துக் கழகத்தில் 500 ஓட்டுநர்களை ஒப்பந்தமுறையில் நியமிக்க டெண்டர் விடப்பட்டிருந்தது. அதை நடைமுறைப்படுத்தக் கூடாது எனகடந்த மார்ச் 8-ம் தேதி கண்டனஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். அப்போது மின்சார பேருந்தைதனியார் மூலம் இயக்கவும் எதிர்ப்பு தெரிவித்தோம்.

நிர்வாகம் தரப்பில், தனியார்மயமாக்க மாட்டோம், பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்போம் என தெரிவித்தனர். ஆனால், நேற்று முன்தினம் பணிமனை ஓட்டுநர்கள் பணிக்கு வருவதாக தெரிந்தது. இதையடுத்து, திமுகவின் தொமுச பேரவையைச்சேர்ந்தவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதற்கு அண்ணா தொழிற்சங்கம் கண்டனம் தெரிவித்தது.

போக்குவரத்து என்பதுசேவைப் பிரிவு, வேலைநிறுத்தம் செய்வதாக இருந்தால் முன்பேமுறையான அறிவிப்பு வெளியிடவேண்டும். திடீரென வேலைநிறுத்தம் செய்து அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்களையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என கூறியது சரியல்ல. குறிப்பாக பொதுமக்களை வஞ்சிக்கும் விதமாக திடீர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அண்ணா தொழிற்சங்கத்தை அழைக்காததற்கு கண்டனத்தை தெரிவிக்கிறோம். தற்போது தொழிலாளர்களின் பணத்தை வைத்து போக்குவரத்துத்துறை நடத்தப்படுகிறது. அவர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ரூ.19 கோடியை கடன் சங்கத்துக்கு வழங்காததால், தொழிலாளர்களால் கடன் பெற முடியவில்லை என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in