

சிவகங்கை: சிவகங்கை ரயில் நிலையத்தில் தரகர்களின் ஆதிக்கத்தால் தட்கல் டிக்கெட் எடுக்க முடியாமல் பயணிகள் தவித்து வருகின்றனர்.
சிவகங்கை ரயில் நிலை யத்தில் இருந்து தினமும் ஏராளமானோர் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர். மேலும் இங்கு காலை 7.45 மணி முதல் தட்கல் டிக்கெட்டுக்கான படிவங்கள் வழங்கப்படுகின்றன. குளிர்சாதனப் பெட்டிகள், சாதாரணப் பெட்டிகள் என தனித்தனியாக படிவங்கள் வழங்கப்படுகின்றன.
இதில் முதல் 5 படிவங்கள் வரை பொய்யான முகவரியைக் கூறி தரகர்களே வாங்கி விடுகின்றனர். மற்றவர்களுக்கு அதன்பிறகே படிவங்கள் வழங்கப்படுகின்றன.
மேலும் டிக்கெட் பதிவு செய்யும் போது, முதலில் வாங்கிய 5 படிவங்களைப் பூர்த்தி செய்து கொடுத்தவர்களுக்கு மட்டுமே தட்கல் டிக்கெட்டுகள் கிடைக்கின்றன. இதனால் தரகர்கள் வாங்கிய படிவங்களுக்கு மட்டுமே டிக்கெட்டுகள் கிடைக்கும் நிலை உள்ளது. மற்றவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.
இதுகுறித்து சிவகங்கையைச் சேர்ந்த குமரன் கூறியதாவது: தரகர்கள் ஆதிக்கத்தால் உண்மையான பயணி ஒருவருக்குக்கூட தட்கல் டிக்கெட் கிடைப்பதில்லை. ஒரு படிவத்தில் 4 பேர் வரை டிக்கெட் எடுக்கலாம்.
இந்த நடைமுறையை முறைகேடாகப் பயன்படுத்தி, தாங்கள் வாங்கிய படிவங்களை கூடுதல் விலைக்கு பலரிடம் விற்று விடுகின்றனர். இதனால் எங்களைப் போன்றவர்களுக்கு தட்கல் டிக்கெட் கிடைப்பதில்லை. இதைத் தடுக்க ரயில்வே நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து சிவகங்கை ரயில்வே நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, தரகர்கள் யாரும் வருவதில்லை.முறையாகத்தான் படிவங்களை வழங்குகிறோம், என்று கூறினர்.