Published : 31 May 2023 06:10 AM
Last Updated : 31 May 2023 06:10 AM
திருவண்ணாமலை: புனல்காடு குப்பை கிடங்கை அகற்றுவது தொடர்பாக பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அளித்துள்ள வாக்குறுதியை ஏற்று 17 நாட்களாக நடைபெற்று வந்த காத்திருப்பு போராட்டத்தை முடித்துக் கொள்வதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் அமைக்கப் பட்டுள்ள குப்பை கிடங்கை அகற்ற வலியுறுத்தி, காஞ்சி சாலையில் கடந்த 13-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. 17-வது நாளான நேற்று முன்தினம், ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணமாக சென்று ஆட்சி யர் பா.முருகேஷிடம் மனு அளிக்க, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் தலைமையில் கிராம மக்களும் விவசாயிகளும் முயன்றனர்.
நடைபயணத்துக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்தி கேயன் அனுமதி மறுத்ததால் போராட்டம் தீவிரமடைந்தது. காவல் துறையின் தடைகளை தகர்த்தெறிந்து, ஆட்சியர் அலுவலகத்தை கிராம மக்களும், விவசாயிகளும் முற்று கையிட்டனர்.
இதையடுத்து, ஆட்சியர் பா.முருகேஷுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் தலைமையிலான குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் பேச்சுவார்த்தை நடத்தி குப்பை கிடங்குக்கு சுமூக தீர்வு காண்பது என முடிவெடுக் கப்பட்டது.
அதன்படி, திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அமைச்சரின் முகாம் அலுவலகத்தில் நேற்று பேச்சு வார்த்தை நடைபெற்றது. பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலுவுடன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.வீரபத்திரன் மற்றும் ஒன்றியச் செயலாளர் ராமதாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பேச்சுவார்த்தைக்கு பிறகு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் பெ.சண்முகம் கூறும் போது, “புனல்காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்கப் படுவதால் ஏற்படும் பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கூறினோம். கிராம மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, மாற்று இடத்தை 10 நாட்களில் தேர்வு செய்ய அதி காரிகளுக்கு அறிவுறுத்தினார். திருவண்ணாமலை சுற்றுப்புற பகுதியில் உள்ள அரசுக்கு சொந்தமான இடங்களை பார்வையிட்டு தகுந்த இடத்தை அடை யாளம் காட்டுமாறு எங்களையும் கேட்டுக்கொண்டார்.
மாற்று இடம் தேர்வு செய்யும் வரை, குப்பை கிடங்கில் கட்டுமான பணியை தொடர வேண்டாம் என கேட்டுக்கொண்டோம். எங்களது வேண்டுகோளை ஏற்று, கட்டுமான பணி நடைபெறாது எனவும் தெரிவித்தார். குப்பைகளும் கொட்டுவது இல்லை. மாற்று இடம் கிடைக்கவில்லை என்றால், கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் தெரிவிக்கும் பாதிப்புகளுக்கு தீர்வு காணும் வகையில் பாதுகாப்பு அம்சங்களுடன் அடுத்தக்கட்ட பணியை மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.
கவுரவ பிரச்சினை இல்லை: பல இடங்களை ஆய்வு செய்து விட்டு, புனல்காடு கிராமத்தை தேர்வு செய்ததாக தெரிவித்த அமைச்சர், மக்களின் எதிர்ப்பை அரசு கவுரவ பிரச்சினையாக பார்க்கவில்லை. மக்கள் நலன் சார்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அமைச்சர் எ.வ.வேலுவின் வாக்குறுதியை ஏற்று, 17 நாட்களாக நடை பெற்று வந்த காத்திருப்பு போராட் டத்தை முடித்து கொள்கிறோம். ஆட்சியாளர்களின் செயல்பாடு களை பொறுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT