

கோவை: கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலங்களை இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மீட்டனர்.
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியைச் சேர்ந்த 11 விவசாயிகள் தென்னை, வாழை, பாக்கு உள்ளிட்டவற்றை சாகுபடி செய்து வந்தனர். இந்நிலையில், கோயில் நிலத்தை மீட்கும் முயற்சியில் கோயில் நிர்வாகத்தினர், வருவாய் துறையினர் ஆகியோர் நேற்று (மே 29) ஈடுபட்டனர். அப்போது விவசாயிகள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் அதிகாரிகள் அறிவிப்பு பலகையை வைத்தனர்.
இது தொடர்பாக கோயில் உதவி ஆணையர் விமலா கூறியது: ''விவசாயிகள் விவசாயம் செய்து வந்த இந்த பூமியானது, கோயிலில் பணிபுரிந்த பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊழிய பூமி ஆகும். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு சம்பளம் இல்லை. அதற்குப் பதில், நிலத்தை அளித்து, அதில் வழி, வழியாக அவர்கள் விவசாயம் செய்து வருவாய் ஈட்டி வந்தனர். அவர்கள் அந்த நிலத்தை விற்க முடியாது. கோயிலுக்கு சொந்தமாக ஊழிய பூமி மட்டும் 83 ஏக்கர் உள்ளது.
அதுபோக, கோயிலுக்கு சொந்தமாக 367 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆண்டு குத்தகைக்கு எடுத்து விவசாயிகள், விவசாயம் செய்து வந்தனர். அந்த குத்தகை நிலத்துக்கு அருகில் இருந்த ஊழிய பூமியை ஆக்கிமிரத்து சில விவசாயிகள் விவசாயம் செய்து வந்தனர். அந்த இடத்தை விட்டு வெளியேறுமாறு நோட்டீஸ் அனுப்பியும் அவர்கள் வெளியேறவில்லை. இந்நிலையில்தான், கோயிலுக்கு சொந்தமான சுமார் ரூ.100 கோடி மதிப்பிலான 17.96 ஏக்கர் நிலம் மீட்கப்பட்டுள்ளது'' என்று அவர் கூறினார்.