தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்யுங்கள்: ஜப்பான் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

தமிழக உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முதலீடு செய்யுங்கள்: ஜப்பான் நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டும். நிர்வாக உதவி, மனித ஆற்றல் இரண்டும் கிடைக்கும் தமிழகத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டோக்கியோவில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஜப்பானிய நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தகஅமைப்பான ‘ஜெட்ரோ’வுடன் இணைந்து, தலைநகர் டோக்கியோவில் மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டை தமிழக அரசு நேற்று நடத்தியது. இதில் சுமார் 200 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அதிகாரிகள் பங்கேற்றனர்.

மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: ஜப்பான்தலைநகராக, உலகின் மிகப்பெரிய பொருளாதார நகரங்களில் ஒன்றாக, புகழ்பெற்ற 500 நிறுவனங்களில் 51 நிறுவனங்களின் தலைமையகங்கள் இயங்கும் நகராக டோக்கியோ உள்ளது. இங்கு வந்ததை பெருமையாக கருதுகிறேன். நாடு தழுவிய போக்குவரத்து வசதி, வானளாவிய கட்டிடங்கள், வரலாற்று நினைவுச் சின்னங்கள் என ஓர் உதாரண நகரமாக திகழ்கிறது டோக்கியோ. நகரத்தின் அனைத்து எரிசக்தி தேவைகளும் ஹைட்ரஜன், காற்றாலை, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தியால் பூர்த்தி செய்யப்படுவது ஆச்சரியமாக உள்ளது.

முதலீட்டாளர்கள் மாநாடு: எங்கள் தமிழகத்தை எப்படி உருவாக்க நினைக்கிறோமோ, அந்த கனவுப் பரப்பை, நான் இங்கு பார்க்கும் காட்சிகள் அதிகப்படுத்தி உள்ளன.

சென்னையில் வரும் 2024 ஜனவரியில் மிகப் பெரிய அளவில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்தியாவும், ஜப்பானும் ஆசியாவின் இரு பெரிய, பழம்பெரும் ஜனநாயக நாடுகள். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவு சமீபகாலத்தில் பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பான் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் தமிழகம்தான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த முன்னணி மாநிலமாக விளங்குகிறது. ஜப்பானுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள தமிழக அரசு தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது.

ஜப்பானின் பொருளாதார, வர்த்தக, தொழில் அமைச்சகம், ஜெட்ரோ நிறுவனம், ஜப்பான் வணிக, தொழில் பேரவை (JCCI) ஆகியவற்றுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கனகாவா, ஹிரோஷிமா மாகாணங்களுடன் பொருளாதார புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜப்பானின் மிகப்பெரிய வங்கிகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல மாகாணங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

தமிழகத்தை 2030-31-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் லட்சிய இலக்கை நோக்கி பயணிக்கிறோம். கடந்த 2 ஆண்டுகளில் பல துறை சார்ந்த நிகழ்வுகள் மூலம், 226 திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் வாயிலாக, ரூ.2.95 லட்சம் கோடிக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. 5 ஜப்பானிய நிறுவனங்கள் ரூ.5,596 கோடி முதலீடு, 4,244 பேருக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் ஒப்பந்தம் செய்துள்ளன.

நான் முதல்வன் திட்டம்: ஜப்பான் நிறுவனங்கள் உற்பத்தி சார்ந்த துறைகள் மட்டுமின்றி, உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு செய்ய வேண்டும்.நாங்கள் அமைத்து வரும்புதிய தொழில் பூங்காக்களிலும் முதலீடுகளை வரவேற்கிறோம். உங்கள் தொழிற்சாலைகளை எங்கள் மாநிலத்தில் அமைக்கும்போது, அதுதொடர்பான தலைமை அலுவலகத்தையும் எங்கள் மாநிலத்திலேயே அமைக்க வேண்டும்.

தமிழகத்தின் இளைய சக்தியை வளம்மிக்கதாக மாற்றி வருகிறோம்.

‘நான் முதல்வன்’ திட்டம் மூலம், பள்ளி, கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே அனைத்து இளைஞர்களையும் பல்துறை வல்லுநர்களாக வளர்த்து வருகிறோம். பெண்களை தொழில்நுட்ப வல்லுநர்களாக உயர்த்தி வருகிறோம். எனவே, உங்கள் நிறுவனங்களுக்கு சிறந்த திறமைசாலிகள் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. தமிழக அரசு அனைத்து தொழில் நிறுவனங்களையும் ஊக்குவிக்கிறது. நிர்வாக உதவி, மனித ஆற்றல் இரண்டும் கிடைக்கும் தமிழகத்தை ஜப்பான் நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தொடர்ந்து, ஜப்பானின் முக்கிய நிறுவனங்களின் தலைவர்களுடன் மதிய உணவு சந்திப்பில், முதல்வர் கலந்துரையாடினார்.

இதில், தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறைச் செயலர் எஸ்.கிருஷ்ணன், தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் வே.விஷ்ணு மற்றும் பல்வேறு ஜப்பானிய நிறுவனங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in