Published : 30 May 2023 07:43 AM
Last Updated : 30 May 2023 07:43 AM
தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்ற திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில், அமைச்சரும் அதிகாரிகளும் கட்சியினரை கண்டுகொள்வதில்லை என அமைச்சரின் முன்னிலையிலேயே எம்எல்ஏ தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
திமுக தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொது உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் பட்டுக்கோட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், அமைச்சர் அன்பில் மகேஸ், எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், எம்எல்ஏக்கள் க.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), என்.அசோக்குமார் (பேராவூரணி) மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில், எம்எல்ஏ என்.அசோக்குமார் பேசியது: கட்சி நிர்வாகிகளுக்கு மரியாதையே இல்லை. அதிகாரிகள் சொல்வதுதான் நடக்கிறது. கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் பணியிடங்களுக்கு கட்சியைச் சேர்ந்த தகுதியுடைய நபர்களுக்கு வேலை கொடுக்கச் சொல்லி, அதற்கான பரிந்துரையைக் கொடுத்தோம்.
இதுதொடர்பாக, மாவட்ட பொறுப்பு அமைச்சராகிய உங்களிடமும்(அமைச்சர் அன்பில் மகேஸ்) தெரியப்படுத்தியிருந்தோம். ஆனால், நாங்கள் கொடுத்த பரிந்துரையை மாறுதலாகி சென்ற ஆட்சியர், அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்.
தொகுதியில், நலத்திட்டப் பணிகளுக்காக அமைச்சர் பங்கேற்கும் நிகழ்ச்சியை எம்எல்ஏக்கள் உள்ளிட்ட கட்சியினரை கலந்து ஆலோசிக்காமல், பயண விவரம் உட்பட அனைத்தையும் அதிகாரிகளே தீர்மானித்து செயல்படுகின்றனர். அமைச்சராகிய நீங்களும் எங்களிடம் கலந்து ஆலோசிப்பதில்லை.
ஒரு மணிநேரத்தில் 10 நிகழ்ச்சிகளை வைத்துக்கொண்டு வருகிறீர்கள். உங்களை வரவேற்பதற்காக ரூ.1 லட்சம் செலவு செய்து, பல மணி நேரம் திமுக நிர்வாகிகள் காத்திருக்கின்றனர். ஆனால், நிகழ்ச்சிக்கு வந்துவிட்டு ரிப்பன் வெட்டிவிட்டு, உடனே காரில் ஏறிச் சென்றுவிடுகிறீர்கள். நிர்வாகிகளிடம் சால்வையைக் கூட வாங்குவதில்லை. முகம் கொடுத்து பேசுவதில்லை. இப்படியிருந்தால், வரும் மக்களவைத் தேர்தலில் எப்படி வாக்கு வாங்க முடியும்? என்றார்.
அப்போது, குறுக்கிட்ட எம்.பி எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், அசோக்குமாரை தொடர்ந்து பேசவிடாமல் தடுத்தார். இதைத் தொடர்ந்து, அசோக்குமாரின் ஆதரவாளர்கள், பழநிமாணிக்கத்தைப் பார்த்து, “நீங்கள் தொகுதி பக்கமே வருவதில்லை. உங்கள் நிதியில் என்ன செய்திருக்கிறீர்கள்?” என கேள்வி எழுப்பி, அவரை அமரும்படி கூறி கூச்சலிட்டனர்.
அப்போது, மதுக்கூர் ஒன்றியச் செயலாளரான இளங்கோ, எம்எல்ஏ அசோக்குமாரை அமரும்படி கூறி ஒருமையில் பேசியதால், கோபமடைந்த எம்எல்ஏ அசோக்குமார், “நீங்கள் மதிமுகவிலிருந்து வந்தவர்தானே. நீங்க உட்காருங்க” என பதிலுக்கு பேச பெரும் சலசலப்பு ஏற்பட்டது. அதன்பிறகு எம்.பி. பழநிமாணிக்கம் அனைவரையும் சமாதானம் செய்து, கூட்டத்தை முடித்து வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT