Published : 30 May 2023 05:38 AM
Last Updated : 30 May 2023 05:38 AM

கோவை மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்க சிறப்புத் திட்டங்கள் - 3 சந்திப்புகளில் ரவுண்டானா

கோவை: கோவை மாவட்டத்தில், சாலை விபத்துகளை தடுக்க பிரத்யேக திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல்கட்டமாக 6 காவல் நிலைய பகுதிகளில் இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.

கோவை மாவட்ட காவல்துறை பேரூர், பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி ஆகிய உட்கோட்டங்களுடன் இயங்குகிறது. மாவட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. அதிகரித்துவரும் சாலை விபத்துகளை தடுக்க, முக்கிய பகுதிகளில் தடுப்புகள் மற்றும் ரவுண்டானாக்கள் அமைக்க மாவட்ட காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

இதுதொடர்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் கூறியதாவது: மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் விபத்துகள் அதிகம் நிகழும் 169 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு விபத்துகளை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. முதல்கட்டமாக, அன்னூர், பொள்ளாச்சி கிழக்கு, சூலூர், பெரியநாயக்கன்பாளையம், மதுக்கரை, ஆனைமலை ஆகிய காவல் நிலைய பகுதிகளில் பிரத்யேக திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அன்னூர் பகுதியில் ‘பேரிகேடு’கள், பிளிங்கர்ஸ், வேகத்தடை அமைக்க 15 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இங்கு ‘எஸ்’ வடிவில் பேரிகேடுகள் வைக்கப்படும். பிளிங்கர்ஸ் பொருத்தப்பட்டு தேவையான இடத்தில் வேகத்தடை அமைக்கப்படும். வரும் 1-ம் தேதி முதல் இது செயல்படுத்தப்படும்.

169 இடங்களில் வைப்பதற்காக மொத்தம் 507 இரும்பு தடுப்புகள் தேவைப்படுகின்றன. இதில் 220 ஆர்டர் செய்துள்ளோம். 100 தடுப்புகள் வந்துவிட்டன. மீதமுள்ளவை அடுத்த சில நாட்களில் வந்துவிடும். இவை தவிர மீதம் உள்ள தடுப்புகளை, தனியார் நிறுவனங்களின் சிஎஸ்ஆர் நிதியின் மூலம் பெற அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையால் வாகனங்களின் வேகம் குறையும். வாகன விபத்து வெகுவாக குறையும்.

பொள்ளாச்சி - கோவை வழித்தடத்தில், சாலையை கிராஸ் செய்யும் இடங்கள் அதிகளவில் உள்ளன. இதில் 25 இடங்களை மூடினால் அங்கு விபத்து குறையும் என கண்டறிந்துள்ளோம்.

வரும் 1-ம் தேதி இந்த இடங்களை, தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவியுடன் மூட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், மலுமிச்சம்பட்டி, சிந்தாமணி, கற்பகம் கல்லூரி சந்திப்பு ஆகிய இடங்களில், வாகனங்கள் சிக்னலில் நிற்காமல் செல்ல ரவுண்டானா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x